ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அந்நாட்டில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் ஷேன் வார்னே தலைமையிலான அணியுடன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி மோத உள்ளது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியின் பயிற்சியளாராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சச்சின் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கோலி, ஸ்மித் இருவரில் சிறந்த வீரர் யார் என கேட்கப்பட்டதற்கு பதிலளித்த சச்சின், "விராட் கோலி என்னுடைய நண்பர். எனவே நான் அவரைத்தான் சொல்லுவேன். பொதுவாகவே எனக்கு ஒருவருடன் மற்றொருவரை ஒப்பிடுவது பிடிக்காது. நான் விளையாடிய காலத்தில், என்னை பலருடன் ஒப்பிட்டு பேசினர். ஆனால் நானோ, என்னை நானாக இருக்க விடுங்கள் எனக் கூறி ஒதுங்கிவிட்டேன். அவர்களை ஒப்பிடாதீர்கள். இருவரின் பேட்டிங் திறமையையும் கண்டு ரசியுங்கள். நான் கோலியை தேர்வு செய்ததிற்கான முக்கிய காரணம், அவர் ஓர் இந்தியர்" என தெரிவித்தார்.
இதனையடுத்து, உங்களது பழைய ஆட்டத்திறனை தற்போது நினைவுபடுத்தும் வீரா் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த சச்சின், " ஆஸ்திரேலிய இளம் வீரர் லபூஷனேவை பார்க்கும்போது, தன்னுடைய ஆட்டத்தை பார்ப்பது போல உள்ளது என கூறினார். "லார்ட்ஸில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்மித் காயமடைந்த பிறகு காலத்திற்கு வந்த லபூஷனே சிறப்பாக விளையாடினார். குறிப்பாக அர்ச்சரின் பந்து அவரது ஹெல்மெட்டில் அடித்து காயமடைந்த நிலையில், அதன் பின்பு அவர் விளையாடிய விதம் என்னுடைய ஆட்ட நுணுக்கங்களை நினைவுப்படுத்தியது" என்றார்.