சச்சினுக்கு சிறுவயதில் இருந்த வியாதி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரே பயிற்சிப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி பெற்றவர்கள். அதேபோல், இந்திய அணியிலும் இடம்பிடித்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி, எதிரணியினரைக் கலங்கடிக்கச் செய்தவர்கள். இந்த இணைக்கு இடையேயுள்ள நட்பு குறித்து ப்ரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, இதுவரை பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை வெளியிட்டார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம். என்னோடு சேர்த்து ஐந்து வீரர்களுக்கு ஒரேயொரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. எனது படுக்கைக்கு அருகிலேயே சச்சினின் படுக்கையும் இருந்தது. ஒருநாள் நள்ளிரவில் சச்சின் தனது படுக்கையில் இல்லை என்பதைப் பார்த்த நான், வெளியில் தேடிச் சென்றேன். அவர் அங்குள்ள ஒரு பகுதியில் நடந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார். ஆனால், என்னைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அவர் படுக்கைக்குச் சென்று தூங்கிவிட்டார். இதேபோல், வேறு சில நாட்களிலும் அவர் இதையே செய்ய, எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. மறுநாள் காலையில் சிற்றுண்டி இடைவேளையில் பேசிக் கொண்டிருக்கும்போது மிகுந்த தயக்கத்துடன் சச்சினிடம் இதுபற்றிக் கேட்டேன். அவர் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதை ஒப்புக்கொண்டார். என தெரிவித்துள்ளார்.