நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானே தொடர்ந்து அசத்தி வருகிறார். கொல்கத்தா உடனான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
கொல்கத்தா உடனான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸில் 209 ரன்களை குவித்து 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பின்னணியில் தோனி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ரஹானே ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 57 ரன்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.