ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு நடுவே ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதம் தாய்லாந்திற்கு விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். மேலும், ஷேன் வார்னே தனது 700 ஆவது விக்கெட்டை வீழ்த்தியதும் இந்த மைதானத்தில் தான்.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஷேன் வார்னேவின் நினைவைப் போற்றும் வகையில் போட்டியின் போது மாலை 3.50 மணியளவில் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இரு அணி வீரர்களும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களும் சில நிமிடங்கள் வார்னேவிற்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னேவிற்கு மிகவும் பிடித்த ஃப்ளாப்பி ஹேட் எனப்படும் தொப்பியை கொண்டு வந்திருந்த ரசிகர்கள் அதை உயரே தூக்கி அசைத்து ஷேன் வார்னே மீதான தங்களது அன்பை வெளிப்படுத்த மைதானமே உணர்ச்சி பிழம்பானது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வார்னே பெயரில் வழங்கப்படும் என ஆஸி. கிரிக்கெட் வரியம் அறிவித்துள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேலரிக்கு வார்னேவின் பெயர் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.