உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட உள்ளது.
உலக கோப்பை டி 20 தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி அதிக அளவில் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாலும், அடுத்த டி20 உலக் கோப்பைக்கு தயாராகும் வகையிலும் சூர்யகுமார் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டி20 போட்டியானது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் உலகக் கோப்பை பற்றியும், நாளை தொடங்கவுள்ள டி20 தொடர் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் தொடர் முழுவதும் செயல்பட்ட விதம் பெருமைக்குரியது. உலகக் கோப்பை முடிந்த மூன்று நாட்களில் அடுத்த தொடருக்கு தயாராவது எளிதல்ல. ஆனாலும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார். மேலும், பேசிய அவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்வி என்பது தூங்கி எழுந்து மறுநாள் காலையில் மறந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இருந்தாலும் அதை விடுத்து, மேலும் முன்னேற வேண்டும். இது ஒரு புதிய அணி, புதிய வீரர்கள், புதிய ஆற்றல். இனி இந்த தொடரில் கவனம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.