ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி, கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த வீரர்களைக் கையில் வைத்துக் கொண்டும், ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.
கடந்த சீசனில் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தும், அதைப் பூர்த்தி செய்யாமல் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை மட்டுமே பிடித்தது. இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளரை மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்டகாலமாக நீடித்து வருபவர் டேனியல் விட்டோரி. அதேபோல், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பவர் கேரி கிறிஸ்டென். தற்போது, அணியின் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக கேரி கிறிஸ்டெனே இருப்பார் என அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் குருவிலா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டென். அதேபோல், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக 2014, 2015 ஆண்டுகளில் இருந்தபோது அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டென் பொறுப்பேற்றிருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.