உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் ஐபிஎல்லை மார்ச் 26 ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்தாண்டு முதல் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால், அணிகளை இரண்டு குரூப்களாக பிரித்து லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப ஐபிஎல் அணிகளை இரண்டு குரூப்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அணிகள் எத்தனைமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன என்பதை வைத்தும், எத்தனை முறை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளது என்பதை வைத்தும் அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன
இதில் ஏ குரூப்பில் முதல் இடத்தில் மும்பை அணியுள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாவது இடத்தில் ஹைதரபாத்தும் உள்ளது. பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். அதேபோல் மற்றோரு குரூப்பில் தனக்கு நிகரான இடத்தில் உள்ள அணியுடன் இரண்டு முறையும், அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதும். உதராணமாக ஏ குரூப்பில் முதல் இடத்தில் உள்ள மும்பை, தனது குரூப்பில் உள்ள கொல்கத்தா ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடனும், பி குரூப்பில் முதல் இடத்தில் உள்ள சென்னையுடனும் இரண்டு முறை மோதும். அதேநேரத்தில் பி குரூப்பில் உள்ள மற்ற அணிகளான ஹைதரபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் ஒருமுறை மட்டுமே மோதும்.
அதேபோல் பி குரூப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹைதரபாத், தங்கள் குரூப்பில் உள்ள சென்னை, பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடனும், ஏ குரூப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடனும் இரண்டு முறை மோதும். ஏ குரூப்பில் உள்ள மற்ற அணிகளான மும்பை ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் ஒருமுறை மட்டுமே மோதும்.
'
ஐபிஎல் அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.