விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தோனி மாதிரி ஒரு வீரர் தேவைப்படுகிறார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 375 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 308 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங், இப்போட்டி குறித்துப் பேசுகையில், "இந்திய அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். தோனி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வரும் போது, சேசிங் செய்வதற்கான மொத்தப் பணியையும் அவர் எடுத்துக்கொள்வார். தோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை. தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.
ஆனாலும், தோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். தோனி மாதிரி என்றால் தோனி போல திறமை கொண்ட வீரர் மட்டுமல்ல, அவரைப் போல வலிமையான வீரர் தேவை. இந்திய அணி சேசிங் செய்யும் போது தோனி பதட்டப்பட்டு நாம் பார்த்ததில்லை. அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். அதே போல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் தோனி கைதேர்ந்தவர்" எனக் கூறினார்.