Skip to main content

"அது மட்டும் நடந்துவிட்டால் இந்திய வீரர்கள் ஒரு வருடத்திற்கு கொண்டாடலாம்..." - மைக்கேல் கிளார்க் பேச்சு 

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Michael Clarke

 

விராட் கோலி இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றுவிட்டால், அதை ஒரு வருடத்திற்கு அவர்கள் கொண்டாடலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதற்கட்டமாக இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

 

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் முழுமையாக விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி ரஹானே தலைமையில் விளையாடவுள்ளது. விராட் கோலி இல்லாத அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ளும் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் எதிர்வரவிருக்கும் டெஸ்ட் தொடர் குறித்துப் பேசுகையில், "விராட் கோலிக்கு இரு பக்கங்கள் உள்ளன. ஒன்று பேட்ஸ்மேன் மற்றொன்று அணி கேப்டன். விராட் கோலி இடத்தில், யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள். கே.எல்.ராகுல் திறமையான வீரர். அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆஸ்திரேலிய சூழலில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

 

ரஹானே சிறந்த வீரர். அவரது கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது. விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்தமண்ணில் வீழ்த்திவிட்டால் இந்திய வீரர்கள் அதை ஒரு வருடத்திற்குக் கொண்டாடலாம். இந்த வீரர்கள் இந்தத் தொடரை இவ்வாறுதான் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள நாம் சிறந்த அணி என இந்திய வீரர்கள் நம்பிக்கை கொண்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்" எனக் கூறினார்.