இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில், இன்று இந்தத் தொடரின் நான்காவது போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவரும் ஆஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்டத்திலும் அதே போக்கைக் கடைபிடித்தது. அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பேத் மூனி அதிகபட்சமாக 71(46) ரன்கள் எடுத்திருந்தார். 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸி வீராங்கனை மேகன் ஸ்கட் ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜெமிமா ரோட்ரிகூஸ் சாதனை
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகூஸ் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவர் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதில் 8 பவுண்டரிகள் அடக்கம். 17 வயதேயான அவருக்கு சர்வதேச டி20 போட்டியில் இதுவே முதல் அரைசதம் ஆகும். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.