16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.
14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று நேற்றுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு சூழலுக்கும் திட்டம் வகுத்து செயல்படும் தோனி தலைமையில் 5 ஆவது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இக்கட்டான சூழலில் தனது முகத்தில் பதற்றத்தை வெளிக்காட்டாத ஜடேஜா சென்னை அணிக்கான வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.