Skip to main content

"ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட இதுதான் முக்கியம்" அதிருப்தியை வெளிப்படுத்திய ஷேன் வார்னே

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Shane Warne

 

 

ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என பேட் கம்மின்ஸிற்கு ஓய்வு அளித்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸிற்கு மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவர் தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரவிருக்கும் டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இம்முடிவிற்கு எதிராக ஷேன் வார்னே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "பேட் கம்மின்ஸிற்கு ஓய்வு அளித்தது ஏமாற்றமாக உள்ளது. இந்தத் தொடர் மிகப்பெரிய தொடர் என்று நான் அறிவேன். இரு போட்டிகளில் விளையாடியவுடன் வீரர்களுக்கு ஏன் ஓய்வளிக்க வேண்டும். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய காரணத்திற்காக ஓய்வு அளிக்கப்பட்டதா? ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதே முக்கியம். ஒன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடக்கூடாது அல்லது ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதற்காக ஆஸ்திரேலிய அணிக்கான போட்டியை தவறவிடக்கூடாது. இதில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்" எனக் கூறினார்.