நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்றும் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வில்லியம்சன் கூறியதாவது, “நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம். அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகப் பணிகளைக் கொண்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் 22 போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அவரது 24 டெஸ்ட் சதங்களில் 11 சதங்கள் அவர் கேப்டனாக இருந்தபோது அடித்தவை.
நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தான் உடன் விளையாட உள்ள தொடருக்கு டிம் சௌதி தலைமைத் தாங்குவார் எனவும், துணைக் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் வீரராக அணியில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.