Skip to main content

இவரின் விக்கெட்டை வீழ்த்தினால்தான் நான் நம்பர் 1 பவுலர் – பும்ரா

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

“பெர்த் போன்ற பிட்ச்களில் பும்ராவின் பவுலிங்கை நான் சந்திக்க விரும்பவில்லை” என்று டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி குறிப்பிட்டார். அந்த தொடரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர் வெற்றியை இந்திய அணி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பும்ராவின் பவுலிங். லிமிடெட் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்பட்ட பும்ரா கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி வெளிநாடுகளில் அசத்தினார்.

 

jasprit bumrah

 

2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு அறிமுகமானார் ஜஸ்ப்ரிட் பும்ரா. விளையாடத் துவங்கி 3 ஆண்டுகளில் இன்று உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார். யார்கர், ஸ்லொவ் பால், பவுன்சர் என பல விதமான பவுலிங் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். அவர் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தது ஐ.பி.எல். போட்டிகளில் அவரின் அற்புதமான பவுலிங்.
 

2013-ஆம் ஆண்டு தனது முதல் ஐ.பி.எல். போட்டியில் கெயில், கோலி போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கு பந்துவீசினார். அந்த போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். குறுகிய காலகட்டத்தில் மிகவும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பவுலிங்கில் அசத்தி பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வருகிறார். இன்று உலகின் சிறந்த பவுலர், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் இவர்தான்.
 

டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட் ஏ பி டி வில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட் ஸ்டீவ் ஸ்மித், 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் விக்கெட் விராட் கோலி, டி-20 போட்டிகளில் முதல் விக்கெட் வார்னர் என அனைத்தும் நட்சத்திர வீரர்களின் விக்கெட். 
 

virat

 

ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா வரும் ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதில் முனைப்பாக உள்ளார். “உலகின் சிறந்த பந்துவீச்சாளரா நான்? இன்னும் இல்லை. நான் இன்னும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனை அவுட் செய்ய வேண்டும். விராட் கோலி, நான் வருகிறேன். இந்த முறை நீங்கள் என் அணியில் இல்லை” என்று பும்ரா ஐ.பி.எல். ப்ரோமோ ஒன்றில் கூறியுள்ளார்.


இந்திய அணியில் ஒன்றாக இணைந்து விளையாடிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் வேறு வேறு அணியில் விளையாடவுள்ளனர். வெளிநாட்டு அணிகளுடன் ஆக்ரோசமாக விளையாடிய வீரர்களுடன் ஒரே அணியிலும் இந்திய அணி வீரர்கள் விளையாடவுள்ளனர். ஐ.பி.எல். போட்டிகள் பற்றி பலரும் கருத்துகள் கூறி வரும் நிலையில் இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டு ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 

ஐ.பி.எல். நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தை 6.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் ஃபாலோ செய்து வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு அணிக்கும் தனியாக அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்குகள் உள்ளன. அதிகபட்சமாக மும்பை அணிக்கு 4.97 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். சென்னை அணி - 4.54, கொல்கத்தா அணி - 4.12, பெங்களூர் அணி - 3.35, சன் ரைசர்ஸ் அணி - 2.02, பஞ்சாப் அணி - 1.91, டெல்லி அணி - 1.32, ராஜஸ்தான் அணி - 1.09 மில்லியன்  ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளது.  
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 23-ம் தேதி விளையாடுகிறது. 24-ஆம் தேதி டெல்லி அணியுடன் மும்பை அணி மோதவுள்ளது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் 28-ஆம் தேதி விளையாடவுள்ளது. ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியை எதிர்கொள்ளும் போது பும்ராவின் பவுலிங் பெங்களூர் அணிக்கு சவாலாக இருக்கும்.  இதில் கோலி vs. பும்ரா, டி வில்லியர்ஸ் vs. பும்ரா மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்று.