இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 60 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த நியூஸிலாந்து அணியை ராஸ் டெய்லர் மற்றும் டாம் லத்தெம் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லத்தெம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து அணி 243 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 244 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 62 ரன்னும், தவான் 28 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியின் கேப்டன் கோலி 60 ரன்னும், அம்பதி ராயுடு 40 ரன்னும் எடுத்தனர். கோலி விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 7 ஓவர்கள் மீதமிருக்கும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் விதித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.