இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக ஆடியுள்ளதாகவும், இதேபோல், உலகக்கோப்பையிலும் அந்த அணியால் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான் எனவும் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4 - 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும். இன்னும் இந்தத் தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், ‘இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் மூலமாக தொடரையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணியின் வெற்றி பாராட்டுக்குரியது. இந்தத் தொடரைப் பொருத்தவரை இந்திய அணியின் டாப் - 3 வீரர்களும் சதம் அடித்துள்ளனர். எங்கள் அணியில் இருந்து ஒரேயொரு சதம்தான் அடிக்க முடிந்தது. இதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். இந்தத் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, உலகக்கோப்பையில் சிறப்பான அணியாக களமிறங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய சுழற்பந்து காம்போ பற்றிப் பேசிய அவர், ‘இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களாக இருப்பவர்கள், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ்வும், யதுவேந்திர சகாலும்தான். இருவருமே உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். அவர்கள் எந்த இடத்திலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். ஆனால், உலகக்கோப்பை நடக்கவிருக்கும் இங்கிலாந்தில் அவர்களால் தற்போது போல் பந்துவீச முடியுமா என்பது தெரியாது. அங்கு சூழல் வேறுவிதமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.