ரோகித் சர்மாவின் அதிரடி மற்றும் ஹர்தீக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் விளையாட்டால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. பிரிஸ்டனில் உள்ள கண்ட்ரி க்ரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஏமாற்ற 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான் தொடக்கத்திலேயே வெளியேறி ஏமாற்றினார். பின்னர் வந்த ராகுலும் பால் பந்தில் வெளியேற, கேப்டன் கோலியுடன் ஜோடிசேர்ந்த ரோகித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 43 ரன்களுடன் கோலி பெவிலியன் திரும்ப, ஹர்தீக் பாண்டியா - ரோகித் இணை வெற்றி இலக்கை சுலபமாக எட்டியது. ரோகித் சர்மா 56 பந்துகளில் 100 ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தார். பவுலிங்கில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாண்டியா, 14 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டினார். இதன்மூலம், 2 - 1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.