கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023ல் பங்குபெரும் அணிகள் செப்டம்பர் 5க்குள் முதற்கட்ட 15 வீரர்களை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) காலக்கெடு வைத்திருந்தது. கடைசி நாளான இன்று (05-09-2023) உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட இந்திய அணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிசிசியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இணைந்து இலங்கை, கண்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வீரர்களின் பெயரை அறிவித்தனர். அதில், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டியா (துணைக் கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும், உலகக் கோப்பை வாய்ப்பினை இழந்துவிட்டனர். தொடர்ந்து இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. மேலும், சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், யூஸ்வேந்திர சஹல், ஷிகர் தவான் உள்ளிட்டோரும் அணியில் இல்லை. ஆனால், ஐசிசியின் அனுமதியின்றி அணிகள் செப்டம்பர் 28 வரை மாற்றங்களைச் செய்யலாம் எனவும் தெரிவித்தது. இன்னும் 23 நாட்களுக்குள் இந்திய அணியில் மாற்றம் வரவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பை 2023, அக்டோபர் 5 ஆம் தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை, சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியதில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.