இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்தியா 283 ரன்கள் எடுத்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 6 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியை அளித்தது. தொடக்க வீரர்களான ராஹுல் மற்றும் முரளி விஜய் வழக்கம் போல் சொற்பை ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து அடுத்து விளையாட வந்த புஜரா, கோலி ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது இந்திய அணி.
இந்நிலையில், இன்று 5வது நாள் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமன் விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் வெளியேறினார்கள். இதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, 56 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.