ஆஸ்திரேலியாவில் 71 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது இந்திய அணி. இதனை ஊக்குவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிக்கான சம்பளமாக இந்திய வீரர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. அதே அளவு தொகையை ஊக்கத்தொகையாக அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள்களுக்கு, ஒவ்வொரு டெஸ்டுக்கும் தலா ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வெளியில் இருந்த மாற்று வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ.7½ லட்சம் வழங்கப்பட உள்ளது. இதே போல் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் கொடுக்கப்படும். பயிற்சியாளர் அல்லாத அணியின் உதவியாளர்களுக்கு அவர்களது ஊதியம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.