Skip to main content

உலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
chahal

 

 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கில்லெட் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே, இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமன்செய்துள்ளன. தற்போது, மூன்றாவது மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. ஐந்து பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணியில் புதிதாக கேதர் ஜாதவ், விஜய் சங்கர் மற்றும் யஷ்வேந்திர சகால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலிய சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. வழக்கம்போல், எம்.சி.ஜி. மைதானமும் சுழலுக்கு ஏதுவானதாக இருந்ததால், சகாலின் பந்துவீச்சு பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியைத் தந்தது.
 

 

 

இந்தப் போட்டியில் முழுமையாக பத்து ஓவர்களையும் வீசிய சகால், 42 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்குமுன்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற உலக சாதனையை 1991ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே (5 - 15) வைத்திருக்கிறார். தற்போது அந்த சாதனையை சகால் முறியடித்துள்ளார். அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஜித் அகர்கரின் சாதனையையும் சகால் சமன்செய்து சாதனை படைத்துள்ளார். 
 

230 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. பவுலர்களின் பணி முடிந்தது. இனி பொறுப்பு பேட்ஸ்மென்களிடம்தான்.