அசாம் மாநிலத்தின் முதல் விளையாட்டு தூதராக தடகள வீராங்கனை ஹிமா தாஸை நியமித்து அறிவித்தார் அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால்.
அசாம் மாநிலத்தில் உள்ள நவுகாதி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹிமா தாஸ். சிறுவயதில் இருந்தே கால்பந்து மற்றும் கபாடி போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட இவரது திறமையை அறிந்து நிப்பான் தாஸ் எனும் பயிற்சியாளர், அசாம் மாநில தடகள போட்டிகளுக்காக தயார்ப்படுத்தினார். ஆனால், தனது திறமையால் சர்வதேச போட்டிகளில் தகுதிபெற்ற 18 வயதேயான ஹிமா தாஸ், பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், 51.46 விநாடிகளில் ஓடிக்கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனால், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி என பலரும் ஹிமா தாஸைப் பாராட்டி வருகின்றனர். இதுவரை சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த யாரும் தங்கம் வென்றது கிடையாது என்ற குறையைத் தீர்த்ததால், ஹிமா தாஸை பலரும் தங்க மகள் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கான விளையாட்டுத் தூதராக ஹிமா தாஸை நியமித்துள்ளார் முதல்வர் சர்பானந்தா சோனோவால்.