பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டி, நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 132 ரன்களைக் குவித்தார். பெங்களூரு அணி சார்பில் ஷிவம் டுபே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தது. 17-வது ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக கே.எல்.ராகுல் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி தவறவிட்டார். கே.எல்.ராகுல் கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், பஞ்சாப் அணியின் ரன் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர், இப்போட்டியில் விராட் கோலி செய்த தவறுகள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், "ஷிவம் டுபே இரண்டு ஓவர் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுத்தது தவறில்லை. அதை இறுதி ஓவரின் போது கொடுத்தது தான் தவறு. அதை ஸ்டெயின் அல்லது நவ்தீப் சைனியிடம் கொடுத்திருக்க வேண்டும். நவ்தீப் சைனி 17-வது ஓவரின் போதே பந்துவீசி முடித்துவிட்டார். இவையெல்லாம் தவறான கணக்கீடாக அமைந்தது. கே.எல்.ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தால் அணியின் ரன்கள் 185-க்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அதன்மூலம் அவர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடியிருக்க முடியும். 20 ஓவர் போட்டியில் செய்யும் சிறிய தவறு எவ்வளவு பெரிய முடிவைத் தரும் என்பதற்கு இது உதாரணம்" எனக் கூறினார்.