மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்யும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் முன்னாள் ஜாம்பவான் கங்குலி.
நம்பர் 1 பேட்ஸ்மேன், நம்பர் 1 பவுலர் கொண்ட இந்திய அணி சுமாரான மிடில் ஆர்டர் பேட்டிங் யூனிட்டைகொண்டுள்ளது. அதிலும் யார் நம்பர் 4 என்பதற்கு இன்னும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய பாணியில் சர்ப்ரைஸ் தரும் வகையில் ஒரு வீரரை நம்பர் 4 இடத்திற்கு பரிந்துரை செய்துள்ளார் கங்குலி.
கடந்த சில மாதங்களாக தினேஷ்கார்த்திக், ராயுடு, விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் என பல வீரர்கள் அந்த இடத்தில் விளையாடியுள்ளனர். அவர்களில் ராயுடு தொடர்ந்து அந்த இடத்தில் விளையாடி வந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் 3 போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
விஜய் சங்கர் தற்போது சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 4-வது இடத்தில் அவரை களமிறக்கலாம். விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக இருப்பதால் பவுலிங்கிலும் பங்களிப்பார். இப்படி 4-வது இடத்தில் இறங்கும் வீரர் பற்றி பல கருத்துகள் வெளிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி புஜாராவை நம்பர் 4 வீரராக களமிறக்கலாம் என்று கூறியுள்ளார்.
என்னுடைய சாய்ஸ் பலருக்கு ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருக்கலாம். இதுவரை நம்பர்4-க்கு முயற்சி செய்த வீரர்களை ஒப்பிடும்போது புஜாரா சிறந்தவர். அவருடைய பீல்டிங் பலவீனம் தான். ஆனால் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக அவுட் ஆகும் போது நிலையாக விளையாடும் வீரர் 4-வது இடத்தில் இறங்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் பல முறை இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி பெற வைத்துள்ளார் புஜாரா. இந்த அனுபவம் புஜாராவிற்கு உதவும் என்று கங்குலியின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் டிராவிட் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடிய நிலையில் புஜாராவால் அந்த இடத்தில் விளையாட முடியும் என்று கங்குலி கூறினார். புஜாரா 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான மைதானங்களில் பலமுறை சிறப்பாக விளையாடியுள்ளார் புஜாரா.