ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி மறைமுகமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, தனது தனித்துவமான ஆட்டங்களாலும், ஆளுமையாளும் பலரையும் கவர்ந்தவர். 36 வயதான இவர் இந்த வயதைக் கடந்த மற்ற வீரர்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதேசமயம், சரியான சமயங்களில் தனக்கு இருக்கும் பொறுப்பினை இளம் வீரர்களுக்கும் அவர் வழங்கிவருகிறார். ஆனாலும், நீங்கள் எப்போது ஓய்வுபெறுவீர்கள் என்று தோனியிடம் கேட்காதவர்கள் இல்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 11ஆவது சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. அங்கிள்ஸ் அணி கிண்டல் செய்யப்பட்டாலும், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் மிக எளிமையாக விளையாடுகிறார்கள். அதுவே, கேப்டனுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. ஒருவேளை நல்ல அணி அமையாவிட்டால், கேப்டன் பக்கம் நெருக்கடி அதிகரிக்கும். ஆனால், சென்னை அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடுகிறார்கள்’ என தெரிவித்தார்.
மேலும், ‘அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதிருக்கும் சில வீரர்கள் அணியில் நீடிக்கமாட்டார்கள். ஒருவேளை அவர்கள் டி20 போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்திருப்பார்கள். இந்த பத்து ஆண்டுகள் மிகச்சிறப்பானவையாக இருந்தது’ என தனது வயதைக் கணக்கில் கொண்டு ஓய்வுகுறித்து சூசகமாக பேசியுள்ளார்.