ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வதில்லை என மைக்கல் கிளார்க் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு, எதிரணியை சீண்டுவதற்கும் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு குறித்து மைக்கல் கிளார்க்கிடம் பேட்டி ஒன்றில் கேள்விகேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் இந்திய அணி எவ்வளவு வலுவானது என்பது நமக்குத் தெரியும். அதற்கு ஐ.பி.எல். போட்டித் தொடரே சான்று. இதற்காகவே ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் இந்திய அணிக்குப் பிடித்ததுபோல நடந்து கொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராகக் களத்தில் வாக்குவாதம் செய்வதையோ, அவர்களை சீண்டிப்பார்ப்பதையோ செய்ய பயந்தார்கள்.
இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் ஐ.பி.எல்.தான். மிகக்குறுகிய காலத்தில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க ஐ.பி.எல். தொடர் சிறந்த வழியாக, வீரர்களுக்குத் தெரிகிறது. சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐ.பி.எல். அணிக்கு தேர்வு செய்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.