அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியானது, மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் திகழும் டெல்லி அணி மீது தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 13 போட்டிகளில் களமிறங்கியுள்ள ரிஷப் பண்ட், 287 ரன்கள் மட்டுமே குவித்து தன் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக், ரிஷப் பண்ட் தொடர்பாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் அவர், "ரிக்கி பாண்டிங் நிலைத்து நின்று ஆடுமாறு ரிஷப் பண்ட்டிடம் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். அதிக நாட்-அவுட் உடைய வீரராக இருக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் விரும்புகிறார். பண்ட் சுதந்திரமாக செயல்படக் கூடியவர். களத்தில் இறங்கிவிட்டால், அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டக் கூடியவர். அவரை உங்களால் பிடித்து வைக்க முடியாது. கடந்த சில தொடர்களில், ரன் சேர்ப்பு வேக விகிதம் 150-க்கும் மேலே வைத்திருக்கிறார். அவருக்கு விலக்குக் கொடுங்கள். அவர் விக்கெட்டை இழக்கட்டும். அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் குஷிப்படுத்தட்டும். ரிஷப் பண்ட்டின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.