உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பிசிசிஐ அமைப்பு ஐசிசி க்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த வாரம் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது அந்த ஆட்டத்தின் நடுவே மைதானத்திற்கு மேலே விமானத்தில் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும்'' என்ற வாசகம் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விமானம் பரந்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மைதானத்துக்கு மேலே வலம் வந்த அதே விமானத்தில் ''இனப்படுகொலையை இந்தியா நிறுத்துக...காஷ்மீரை சுதந்திரமாக்கு" என்ற வாசகம் அடங்கிய பேனர் பறந்தது. இதையடுத்து போட்டி நடந்து கொண்டிருந்த போது 3வது முறையாக ''இனப்படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும்'' என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அமைப்பு ஐசிசி க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் "இதுபோன்ற சம்பவங்களால் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இனிவரும் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்" எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் 9 மற்றும் 11ம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.