Skip to main content

வெந்து தணிந்த ஆஸ்திரேலியா, வென்று தணிந்த இந்தியா; செருக்கு தந்த சேப்பாக்கம்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

வெ. அருண்குமார்  

 

nn

 

உலகக் கோப்பையின் ஐந்தாவது லீக் ஆட்டம் மற்றும் இந்தியாவின் முதல் ஆட்டமானது சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், இயற்கையின் இடையூறு இல்லாமல் இனிதே ஆட்டம் தொடங்கியது.

 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஸ் மற்றும் வார்னர் களம் இறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சில் மார்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் கோலியின் அபாரமான கேட்ச்சால் ஆட்டம் இழந்தார். பின்னர் இணைந்த ஸ்மித் - வார்னர் பொறுமையாக ஆடி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய வார்னரை 41 ரன்களில் குல்தீப் ஆட்டமிழக்கச் செய்தார். நிதானமாக ஆடி வந்த ஸ்மித், பெரும் தலைவலியாக இருப்பாரோ என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த போது, ஜடேஜாவின் சுழல் ஜாலத்தில், 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த லபுசேன், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி மற்றும் கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களில் இந்தியாவின் சுழல் கூட்டணியால் சுழற்றி அடிக்கப்பட்டனர். கடைசிக் கட்டத்தில் ஸ்டார்க் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 28 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், சிராஜ், ஹர்திக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

nn

 

பின்னர், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித், இஷான் இணை களமிறங்கியது. சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் இஷான் ஆட்டம் இழந்து இந்திய ரசிகர்களை இன்னலுக்கு ஆளாக்கினார். பின்னர் அடுத்தடுத்து ரோகித் மற்றும் ஸ்ரேயாஸ் என இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களின் இருக்கையை இறுகப்பற்ற வைத்தனர். பின்னர் இணைந்த ராகுல், கோலி ஜோடி பொறுமையாக ஆடி ரன்கள் சேர்த்தது. கோலி 12 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்ஸ் தவற விட்டு, இந்திய ரசிகர்களை இன்முகம் மலரச் செய்தார். கோலி, ராகுல் என இருவரும் அரை சதம் கடந்து, தொடர்ந்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கோலி 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி வரை பொறுமை காட்டிய ராகுல், கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தை தவறவிட்டாலும், 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன்  97 ரன்கள் எடுத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் தேர்வை நியாயப்படுத்தினார். ஹர்திக் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

ஆட்டநாயகன் விருது 97 ரன்கள் எடுத்து, கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய ராகுலுக்கு வழங்கப்பட்டது. பவுலிங், பீல்டிங் என அசத்திய இந்திய அணி, பேட்டிங்கில் மட்டும் தொடக்கத்தில் சொதப்பினாலும், சுதாரித்து வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. சேப்பாக்கத்தில் பெறப்பட்ட இந்திய அணியின் முதல் வெற்றி, இந்திய ரசிகர்கள் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்