உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.