இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (வயது 38) தனது ஓய்வை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் அஸ்வின் அறிவித்துள்ளார்.
டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு மொத்தம் 765 விக்கெட்களை எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புத்திசாலித்தனம் மற்றும் புதுமைக்கு பெயர் போனவர் அஸ்வின். இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது சிறப்பான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளது.