பீகார் மாநிலம் பாட்னாவில் 85வது அகில இந்தியச் சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு இன்று (20.01.2024) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, துணைச் சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டமானது பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார்.
இந்த உரையில் அவர் ஆளுநர் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், “ஆளுநர் குறித்த அப்பாவு பேச்சு நிகழ்ச்சிக் குறிப்பில் பதிவாகாது” எனத் தெரிவித்தார். அதற்குச் சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரின் செயல்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேச முடியவில்லை என்றால், வேறு எங்குப் பேசுவது” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக்கூறி, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாதியில் வெளியேறினார். அதே சமயம் ஆளுநர்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.