ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் தொடர் வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி அதிரடியாகத் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி வீரரான மேக்ஸ்வெல் கடந்த இரு போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் இமாலய ரன் குவிப்பில் முக்கியப் பங்காற்றினார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா மேக்ஸ்வெல் குறித்துப் பேசுகையில், "ஐ.பி.எல் போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல் சர்வதேசப் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் 'மினி'யாக இருந்தவர் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தொடரில் 'மேக்ஸ்'ஸாக உள்ளார். அவர் களத்தில் நிற்கும்போது மரம் வெட்டுபவர் போல உள்ளார். லெக் திசையில் மட்டுமே அடித்து விளையாடுகிறார்.
ஆஃப் திசை பற்றி அக்கறை கொள்ளவேயில்லை. தொடக்கத்தில் அவருக்கு எதிராக யார்க்கர் மற்றும் பவுன்சர் பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீச வேண்டும். அவர் ஈகோ நிறைந்த வீரர். ஆகையால், அவரது ஈகோவுடன் விளையாட வேண்டும். பவுன்சர் வீசினால் அதைச் சமாளித்து விளையாடுவார். யார்க்கர் வீசினால் காலை எடுத்து விளையாடுவார். இரண்டையும் தொடர்ச்சியாகச் செய்யும்போது, அவர் விக்கெட்டை வீழ்த்திவிடலாம்" எனக் கூறினார்.