Skip to main content

சிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது - கலைஞர்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கலைஞர் முதல்வரானதும் திருவாரூரில் பல காலமாக ஓடாமல் கிடந்த தேரைப் புதுப்பித்து ஓட வைத்தார். அப்போது எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா? என்று கேட்டீர்கள். இப்போது நீங்களே தேர் ஓட்டுகிறீர்களே?' இது முரண்பாடாகத் தெரியவில்லையா? என்றார். உடனே கலைஞர்,"

 

kalaingnar photo



என்ன பாடினேன்? ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித்தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா என்று கேட்டேன். அப்போது மக்கள் ஏங்கித் தவித்தார்கள். இப்போது எங்கள் ஆட்சியில் அப்படி யாரும் ஏங்கித் தவிக்கவில்லை. அதனால்தான் தேரோட்டத்தை அனுமதித்திருக்கிறேன்'என்றார். விளக்கத்தைக் கேட்டுக் கலகலப்பானது அவை. அரிசிப் பஞ்சத்தில் மக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரை எப்படிச் சொல்லாமல் சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தவர்கள் மவுனமாகிவிட்டார்கள்.

 

kalaingnar



திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் களவாடப்பட்ட செய்தியும் தணிக்கை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியப் பிள்ளை தூக்கில் தொங்கியதும் நாடறிந்த செய்தி. அப்போது முதல்வராக மக்கள் திலகம் இருந்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். கலைஞர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதிகேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. அப்போது ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்த ஹண்டே எழுந்து, "கருணாநிதி திருச்செந்தூர் போனார். முருகனே அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். 
 

kalaingnar



இப்போது முருகன் சிலை அங்கே இல்லை'என்றார். உடனடியாக எழுந்த கலைஞர்,"திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் திருடுபோய்விட்டது என்று எண்ணினேன். சிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது' என்றார். மக்கள்திலகமும் சேர்ந்து சிரித்துவிட்டார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். எண்ணிலடங்காத சுவையான உரையாடல்கள், கருத்து மோதல்கள். கலைஞரிடம் பேசி வெல்ல முடியாது என்பதை அறிந்து ஏசி வெல்லலாம் என்றெண்ணிக் கரடி விட்டவர்கள் பின்னாளில் கூசி நின்ற நிகழ்வுகளும் ஏராளம்.


சென்னிமலை தண்டபாணி