Skip to main content

வயலின் வாசித்த விஞ்ஞானி!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
 Einstein playing violin


உலகில் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாசித்த வயலின் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 516,500 டாலர்களுக்கு ஏலம்போனது. இந்திய மதிப்பில் சுமார் 3.35 கோடியாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வயலின் மற்றும் அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை அமெரிக்காவை சேர்ந்த போன்ஹம்ஸ் எனும் ஏல நிறுவனம் இதனை ஏலம்விட்டது. இந்த ஏலமானது தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் ஏலத்தில் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

 

 

 Einstein playing violin


 

அறிவிக்கப்பட்ட அடிப்படை விலையை விட ஐந்து மடங்கு ஏலம் போனது. இந்த வயலின் ஐன்ஸ்டைனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு பிரிஸ்டன் கல்வி நிறுவனத்திற்குச்  சென்ற பொழுது, ஆஸ்கர் ஸ்ட்ரெஜ்ர் என்பவர் வயலினை பரிசாக வழங்கினார். அந்த வயலினில் ஐன்ஸ்டினை பற்றி ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்." இவ்வுலகின் மிகச்சிறந்த அறிவியல் பேராசிரியர் ஐன்ஸ்டைனுக்காகத் தயாரிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு  பிப்ரவரி 1933 என்று தேதியையும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், பிரிஸ்டன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் ஹிப்ஸ் என்பவரின் மகனுக்கு அந்த வயலினை பரிசாக அளித்துவிட்டார்.

இந்த வயலின் வாசிப்பு குறித்து ஐன்ஸ்டைன் கூறியுள்ளது "இசையில்லாத என் வாழ்வு நினைத்துப்  பார்க்க முடியாத ஒன்று. என் பகல் கனவிலும் இசைதான், என் வாழ்வை நான் இசை வழியாகத்தான் பார்க்கிறேன், இந்த இசை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது".

 

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.

 

 

Next Story

அதீத மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு குட்டி ட்ரிக் - மனநல மருத்துவர் ராமகிருஷ்ணன் சொல்லும் ஐடியா

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

athma hospital chief doctor ramakrishnan about mental health

 

மன அழுத்தம் (Stress) என்பது தற்போதைய காலத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சனையாகப் பார்க்கப்பட்டாலும், அது தற்கொலை என்ற அசாதாரண முடிவு வரை சிலரை இழுத்துச் சென்றுவிடுகிறது. வேலைக்குச் செல்லும் பலரிடம் அவர்களுக்குரிய பிரச்சனை குறித்துக் கேட்டால் முதலில் சொல்வது மன அழுத்தத்தைப் பற்றித்தான். அதே போல மாணவர்களிடம் கேட்டாலும், அவர்களது முதல் பிரச்சனை மன அழுத்தமாகவே இருக்கும். இப்படி அனைத்துத்தரப்பு மக்களும் தற்போது மன அழுத்தம் என்கிற கொடுமையை அனுபவித்து வருகின்றனர். உலக அளவில் ஒரு ஆண்டில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது, 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

 

இப்படியான புள்ளிவிவரங்கள் கேட்பதற்கே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர் என்பதுவே நிதர்சனமான உண்மை. இந்த தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். நாளுக்கு நாள் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிற இன்றைய சூழலில், திருச்சியில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் ராமகிருஷ்ணனிடம் நக்கீரன் சார்பாக மனநலன் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம். 

 

athma hospital chief doctor ramakrishnan about mental health

 

மன அழுத்தம் என்பது என்ன..? எதனால் எல்லாம் இந்த பிரச்சனை வருகிறது..? 

இன்றைக்கு மன அழுத்தத்துக்கான அர்த்தமே நிறையப் பேருக்குப் புரியலை. எடுத்ததுக்கெல்லாம் நான் மன அழுத்தம், டென்ஷன்ல இருக்கேன்னு சொல்றாங்க. இந்த இரண்டு வார்த்தைகள்தான் அடிக்கடி உபயோகப்படுத்துறாங்க. 4 வயசு குழந்தைகூட நான் டென்ஷனா இருக்கேன்னு சொல்றாங்க. ஏன்னு கேட்டா வீட்டுப்பாடம் எழுதணுமாம். இது ஒரு ரகம்னா, வீட்ல சமைக்கணும்னா டென்ஷனா இருக்குன்னு சொல்லிட்டு ஆர்டர் பண்றாங்க. இதுவும் சாப்பாட்டை ஆர்டர் பண்ணி சாப்பிடுற பழக்கம் அதிகமானதுக்குக் காரணமா இருக்கலாம். முன்னாடியெல்லாம் கூட்டுக் குடும்பத்துல 30 பேர் இருந்தாலும் எந்த நவீன கருவிகளும் இல்லாம சமைச்சு சாப்பிட்டு போனாங்க. இன்னைக்கு நவீன கருவிகள் இருந்தாலும் சமைக்க மாட்டேங்குறோம். இன்னைக்கு காலக்கட்டத்துல மன அழுத்தம் இல்லாம இருக்கவே முடியல. ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கணும், இல்லைனா வாழ்க்கையே போர் அடிச்சிடும்னு நினைக்கிறார்கள். அதுதான் மக்களுக்குத் தெரிய மாட்டேங்குது. மன அழுத்தத்தை எப்படி overcome பண்றதுன்னுதான் யோசிக்கணும்.

 

எங்கு மன அழுத்தம் அதிகம்? வேலை பார்க்கும் இடத்திலா? வீட்டிலா?

முன்னாடியே சொன்ன மாதிரி எல்லா இடங்களிலும் மன அழுத்தம் இருக்கு. காலையில வீட்ல ஆரம்பிச்சு ஆபீஸ்க்கு கிளம்பிப்போய், நைட்டு வீட்டுக்குத் திரும்ப வர்ற வரைக்கும் மன அழுத்தம்தான். அதுவும், ஆபீஸ்ல நம்மகூட வேலைப் பார்க்கிற 4 பேர் வரலைனா அதையும் நாமதான் பார்க்க வேண்டியிருக்கும். அதுலகூட ஒரு மன அழுத்தம் இருக்கு. ஆனால், இந்தமாதிரி சின்ன சின்ன விஷயங்களைக் கூட மன அழுத்தம்னு சொல்லி மூளையில ஏத்திக்காம இருக்கணும். அப்படி மன அழுத்தத்தை ஏத்திக்கிட்டா நிச்சயமா டிப்ரஷன் அதிகமாகிடும். அதனால மூளையை ஃப்ரீயா வச்சுக்கங்க. அதுதான் ஒரே தீர்வு.

 

கேமிங் அடிக்ஷன், குறிப்பாக ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏன் அதிகமான நபர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்?

இன்றைக்கு கேமிங் அடிக்ஷனில் மிக மோசமானது ஆன்லைன் ரம்மி மாதிரியான பணம் பறிக்கும் கேம்கள்தான். இவர்கள் முதலில் கிரெடிட் பாய்ண்ட்களைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நமது கவனத்தை ஆன்லைன் ரம்மி பக்கம் திசை திருப்புவார்கள். உள்ளே சென்று விளையாடத் துவங்கும்போதுதான் நம்மை அறியாமல் நாம் ரம்மி விளையாட்டுக்குள் சிக்க ஆரம்பிக்கிறோம். பொழுதுபோக்குக்காக ஆரம்பிச்சு பணத்துக்காகன்னு விளையாடுற நேரத்துலதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிவு தற்கொலையில் போய் முடியுது. ரம்மி மட்டுமில்லை, Dream 11 மாதிரியான கேம்களும் ஆபத்தான கேம்கள்தான். இதற்கு அடிமையாவதற்குப் பெயர் எண்ணச்சுழல் நோய். இந்த நோயானது ஜெயிக்கணும், பணத்தை வாங்கணும்னு மனச நினைக்க வச்சுக்கிட்டு இருக்கும். இதை முழுசா தடுக்கணும்னா இந்த மாதிரி விளையாட்டுகளை அறவே தவிர்க்கணும்.

 

மன அழுத்தத்தை அதிகமாக உணரும்போது, அதை எதிர்கொள்வதற்கு ஒரு குட்டி ட்ரிக் சொல்லுங்க?

மன அழுத்தம் அதிகமா இருக்குற நேரங்களில் வேகமா ரியாக்‌ஷன் காட்ட வேண்டாம். விபத்தில் சிக்குறது, ஹார்ட் அட்டாக்ல தவிக்கிறதுதான் என்னைப் பொறுத்தவரை எமர்ஜென்சி. நிதானமா யோசிச்சு முடிக்காம, அவசர கோலத்தில் டக்குனு முடிக்கிறது. அவசரக் கோலத்தில் முடிக்கலைனா தலையையா வெட்டிடப் போறாங்க. இதுவரைக்கும் 75 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல பார்த்துட்டேன். என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர்ற எல்லாருக்கும் நான் சொல்றது இதுதான். மன அழுத்தத்தில் இருக்கும்போது அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுவே கூடுதல் மன அழுத்தம் இல்லாம நம்ம பாதுகாக்கும்.

 

அடிக்கடி சோசியல் மீடியா பார்க்கிறது கூட அடிக்ஷன்ல வருமா?

இன்றைக்கு 5 நிமிடம் கூட சோசியல் மீடியாவைப் பார்க்காம யாராலையும் இருக்க முடியாது. கிடைக்கிற நேரங்களில் எல்லாமே சோசியல் மீடியாவில்தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். நம்மை யார் கவனிக்கிறார்கள், நமக்கு ஏன் லைக் போடலைனு ஒருவித கவலைக்கு ஆளாகிடுறாங்க. இது எல்லாமே டிப்ரஷனோட அறிகுறிகள்தான். அவ்ளோ ஏன் செல்ஃபி அடிக்ஷனே வியாதிதான். சோசியல் மீடியாவில் அடிக்ட் ஆகும் குழந்தைகளைப் பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே திசை திருப்ப வேண்டும். குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும். அதேபோல பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி, தங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல், சுற்றுலா செல்லுதல் மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கேமிங் அடிக்ஷனை கண்டுபிடித்தால் அவர்களை வரைதல், நீச்சல் போட்டிகள், சிலம்பம் எனப் பல விஷயங்களில் தொடர்ச்சியாக ஈடுபடச் செய்வது அவர்களின் அடிக்ஷனைக் குறைக்கும்.

 

அடிக்ஷனில் இருந்து விடுபட நினைக்கிறவர்களுக்கு ஆத்மா மருத்துவமனை என்ன மாதிரியான உதவிகளைச் செய்யும்?

இப்போது கேமிங் அடிக்ஷனுக்காக ஒரு வார்டே கொண்டு வரப்போகிறோம். அங்க அவங்களுக்கு தனியா கிரிக்கெட், புட்பால், கபடி-ன்னு முழுக்க முழுக்க Physical Game தான் இருக்கபோகுது. அங்கவச்சு அவங்களுக்கு பயிற்சி கொடுத்தா முழுமையா இந்த அடிக்ஷனில் இருந்து வெளியே கொண்டுவரலாம். எங்ககிட்ட வர்ற பெரும்பாலான நோயாளிகளைக் கவனமா பார்த்துத்தான் குணப்படுத்த வேண்டியிருக்கும். ஆரம்ப கட்டம்னா ஈஸியா குணப்படுத்தி அனுப்பிடலாம். முத்தின நிலைனா கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் குணப்படுத்த வேண்டியிருக்கும். மக்களுக்காகவே 98424 22121-ங்குற நம்பர் 24 மணிநேரமும் இயங்குது. மன அழுத்தம் மாதிரியான பிரச்சனைகளுக்கு எப்போது வேணாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.