பூனே நகரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் இளம்பெண் கௌரி விடியற்காலையில் எழுந்து 5 கிலோ மீட்டர் வாக்கிங், ஜாக்கிங் செல்வார். அடுத்த நாள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிளிங் செல்வார். எல்லாம் காலை 8 மணிக்குள் முடித்துவிட்டு பழக்கடையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது வழக்கம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதனால், உடல் எடை குறையும் என்பது பொதுவான நம்பிக்கை. அதோடு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய், சீறுநீரகப் பிரச்சினை போன்றவற்றிற்கு அருமருந்து என ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது. அதனால் சுரைக்காய் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
கௌரி
காலை டிபன் முடித்துவிட்டு அலுவலகத்திற்கு தனது காரிலேயே போனார். அப்போது திடீரென வயிற்று வலி ஆரம்பித்தது. நேரம் போகப் போக அது கடுமையான வயிற்று வலியாக மாறியது. அடுத்து வாந்தி பேதியும் வர ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். வயிற்றுவலி இன்னும் கடுமையானது. இரத்த வாந்தியும் வயிற்று போக்கும் அதிகரித்தது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல்நோய் நிபுணர் தீவிர சிகிச்சை அளித்தார். வயிறு சுத்தம் செய்யப்பட்டது. இரத்தம் பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் விஷத்தன்மையான மூலக்கூறுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாள் தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் உயர் இரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. மூன்றாவது நாள் இறந்து போனார்.
இதற்கு முன்னர் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உட்பட எந்த பிரச்சினையும் இல்லாத உடல் ஆரோக்கியமாக இருந்தவர். காலை வாக்கிங் போனபோது குடித்த சுரைக்காய் ஜூஸ் உயிரை பறித்துவிட்டது. இப்போது உங்களுக்கு ஏற்படும் ஆச்சர்யம் சுரைக்காய் ஜூஸ் விஷமாக மாறுமா? மாறும்... சில சுரக்காய்கள் விஷம் தான். சுரைக்காய் மட்டுமல்ல வெள்ளரிக்காய், பூசணிக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, பீர்க்கங்காய், புடலங்காய், தர்பூசணி, சீமை பூசணி, சீமை பூசணியில் செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை நிறங்களில் இருப்பது இவையெல்லாம் மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் விஷமாக மாறிவிடும். இவைகளுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவை வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த காய்கள்.
மனிதன் எப்போதும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். தாவரங்களும் அப்படித்தான். தாவர இனங்களில் சப்பாத்திகள்ளி செடி விலங்குகள் தங்களை தின்றுவிடக் கூடாதென முட்களுடன் வளரும். அதே போல சில தாவரங்கள் தங்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள விஷத்தன்மைக்கான மூலக்கூறுகளை கொண்டிருக்கும். அப்படி விஷத்தன்மை கொண்ட தாவர இனம் தான் வெள்ளரிக் குடும்ப வகை தாவரங்கள். இந்த வகை தாவரங்களில் இருக்கும் டெட்ராசிகிளிக் டிராட்டர்ஸ்பிராய்ட் (Tetracyclic triterperiod) எனப்படும் உயிர்வேதி மூலக்கூறுகள்தான் விஷத்தன்மைக்கு காரணம். இது வெள்ளரிக் குடும்பத்தில் குகர்பிடாசின்ஸ் (Cucurbitacins) எனப்படுகிறது.
இந்த குகர்பிடாசின்ஸ்தான் குறிப்பிட்ட காய்கள் கசப்பாகவும் விஷத்தன்மையாகவும் இருப்பதற்கான காரணம். இயற்கையாகவே இது தாவரங்களில் உற்பத்தியாகிறது. அதிலும் குறிப்பாக அதிக வெப்பநிலை, குறைவான தண்ணீர், வளமற்ற மண் போன்றவற்றில் வளர்வதனால் உயிர் வேதிப்பொருள்களில் pH அளவு மிக குறைந்து அமிலத்தன்மை அதிகமாகும். இது விஷத்தன்மையை உருவாக்கும். தாவரவியல் விஞ்ஞானிகள் குகர்பிடாசின்ஸ் உயர் வேதிப்பொருட்களில் உள்ள குகர்பிடாசின்ஸ் A முதல் T வரை வகைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகள் உள்ளன. பாகற்காயில் குகர்பிடாசின்ஸ் A, B, C, D , E வகைகள் உள்ளன. சாதரணமாக நாம் சாப்பிடும் சுரைக்காயில் குகர்பிடாசின்ஸ் B, D, G, H வகைகளின் மொத்தம் 130 ppm மூலக்கூறு அளவை தாண்டாது. ஆனால் இந்த அளவைத் தாண்டினால், அந்த சுரைக்காய் விஷத்தன்மையாகவும் கசப்பாகவும் மாறிவிடும். ஆக அதிகளவிலான குகர்பிடாசின்ஸ் அதிக சகப்பாகவும் கடுமையான விஷமாகவும் இருக்கும், எட்டிக்காய் கசப்பை போல.
இப்போது பிரச்சனை சாதாரணமாக சாப்பிடும் சுரைக்காயில் விஷத்தன்மை சேர்ந்திருப்பது எப்படி என்பதுதான். இதற்கு காரணம் தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள். தாவர உற்பத்திக்கு மகரந்த சேர்க்கை மிக முக்கியமானது. அதில் அயல் மகரந்தச் சேர்க்கை ஒன்று. மகரந்தத் துகள்கள் ஒரு தாவரத்தின் ஒரு மலரிலிருந்து மற்றொரு தாவரத்தில் உள்ள ஒரு மலரின் சூல்முடிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை. இந்த இரண்டு தாவரங்களுக்கும் இடையே நடக்கும் அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணம் பூச்சிகள் தான். வனங்களை ஒட்டி பயிரிடப்பட்டிருக்கும் வெள்ளரிக் குடும்ப செடிகளில் இதே இனத்தில் விஷச் செடி பூக்களில் அமர்ந்த பூச்சிகள் தோட்டத்தில் பயிரிடப்பட்ட சுரைக்காய் செடி பூவில் அமர்ந்து அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அதன்மூலம் உற்பத்தியாகும் தோட்டத்து சுரைக்காயில் விஷத்தன்மை அதிகரித்து விடுகிறது. இந்த மாதிரியான சுரக்காய்தான் கண்ணுக்கு தெரியாத விஷமாக மாறி காய்கறி கடைக்கு வந்துவிடுகிறது.
வெள்ளரிக் குடும்ப காய்களில் அபூர்வமாக இப்படி விஷமாகி ஆயிரக்கணக்கான மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோல விஷமாக மாறிய பூசணியை சாப்பிட்ட அமெரிக்க பெண்மணிக்கு தலைமுடி அனைத்தும் உதிர்ந்துவிட்டதும் நடந்துள்ளது. ஆக சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்கள் சொல்வதெல்லாம் நோய்களை இது தீர்க்கிறது என்பதுதான். இதில் உண்மை இல்லாமலில்லை. குறிப்பாக பாகற்காயில் உள்ள குகர்பிடாசின்ஸ் A, B, C, D, E புற்றுநோய் செல்களை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் இதனை கவனமாக சாப்பிட வேண்டும்.
குறிப்பாக வெள்ளரிக் குடும்ப காய்களை ஜூஸ் அல்லது பச்சையாக சாப்பிடும் போது இயல்புக்கு மாறாக அதிக கசப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுவது நல்லது. பாகற்காயைப் பொருத்தவரை இயல்பிலேயே கசப்பானதுதான். இதனை ஜுஸாகக் குடிப்பதை விட துண்டாக்கி வேக வைத்து சாப்பிடுவதால், இதன் கசப்பு மட்டுமல்ல குகர்பிடாசின்ஸ் அளவும் குறைந்துவிடும். ஒருவேளை பாகற்காய் விஷத்தன்மையாக இருந்தால் கூட இந்த முறையில் விஷத்தன்மை இழந்துவிடும். இன்றைய காலக்கட்டத்தில் பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு அதிகம். அதிக அளவில் பூச்சிமருந்து தெளித்து பயிரிடப்படும் காய்களை பச்சையாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகம். வைரஸ் தொற்று ஏற்படவும் வழி உள்ளது. குடி நீரையே காய்ச்சிக் குடிக்கும் காலத்தில் இருப்பதால் காய்கறிகளையும் வேகவைத்து சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.