ஊசி என்று சொன்னாலே ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடும் நபர்களை நாம் இன்றும் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமின்றி ஊசிக்கு பயப்படுபவர்கள் லிஸ்டில் வயது வந்தவர்களும் இருக்கின்றனர். ஊசியை எப்படி கையாளப்பட வேண்டும் என்று டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
மருத்துவர்களாகிய நாங்களும் ஊசியின் மேல் எங்களுடைய கை படாமல் தான் வெளியே எடுப்போம். பிளாஸ்டிக் பகுதி வரை தான் எங்களின் கை படும். ஏனெனில் கை அதன்மேல் பட்டால் கையில் உள்ள கிருமிகள் அதில் பரவும். நோயாளி ஒருவேளை குளிக்காமல் வந்திருந்தால் சுத்தமின்மை இருக்கும். அதற்காகத்தான் ஊசி போடுவதற்கு முன் நாங்கள் ஒரு காட்டன் துணியை வைத்து ஊசி போடப்படும் தோல் பகுதியை சுத்தம் செய்வோம். இப்படி ஊசி தயாரிப்பது, மருந்தகம் உட்படப் பல இடங்களில் அது பாதுகாக்கப்படுவது, எங்களிடம் வந்த பிறகு நாங்கள் அதைப் பாதுகாப்பாகக் கையாள்வது என்று இவை அனைத்தும் முக்கியமானது.
ரத்த ஓட்டம் குறைவாக, தசை வலு அதிகமாக இருக்கும் இடங்களில் பொதுவாக ஊசி போடுவோம். மருத்துவர், செவிலியர், மருந்தக உரிமையாளர் என்று அனைவருக்கும் இதுகுறித்த சரியான நடைமுறைகள் தெரிந்திருப்பது அவசியம். பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத் தான் ஊசி போடுவதால் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும். ஊசி போடும்போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டியது அவசியம். ஒரே இடத்தில் அடிக்கடி ஊசி போடுவதும் தவறு. மருத்துவர் கவனக்குறைவு இல்லாமல், நோயாளியின் ஒத்துழைப்போடு ஊசி செலுத்தும்போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே உண்மை.