பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேட்கிறார், "என்னதான் வெற்றி, முன்னேற்றம் என்று கூறினாலும், செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முழுமையாக வெளிநாடுகளை சாராமல் இருக்கிறோம் என்று உங்களால் கூற முடியாதுதானே?". அப்போதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்ற அவர் கூறுகிறார், "உண்மைதான், கனரக ராக்கெட்டுகளுக்கு நாம் பிற நாடுகளை சார்ந்திருக்கிறோம். ஆனால், அந்த நிலை இந்த ஆண்டே மாறும்".
அவர் சொன்னதுபோலவே 2018 நவம்பர் 14 அன்று மார்க்-3 (Mark III) விண்ணைக் கிழித்துக் கொண்டு இந்தியாவின் மிக கனமான GSAT-29 செயற்கைகோளை சுமந்து சென்றது. அடுத்த மைல் கல்லாக 2019 ஜூலை 22ம் தேதி உலகமே மிகவும் எதிர்பார்த்த சந்திரயான் 2 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த செயல்திட்டத்திங்களின் வெற்றி மொத்த ISRO அணியுடையது என்றாலும் அந்தத் தலைவரின் பங்கும் அவர் அந்தத் திட்டத்தில் காட்டிய உத்வேகமும் மிக அதிகம். GSAT-29 விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிறகு பேசிய அந்தத் தலைவர், "இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மனிதனை விண்ணுக்கு அனுப்புவோம் என்று சொல்லியிருக்கிறார். அதையும் அவர் நிறைவேற்றுவார். அந்தத் தலைவர் சிவன், அவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் தமிழர் என்பதைத் தாண்டிப் பெருமைப்படவைக்கும் இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? அவர் பிறந்து வளர்ந்த பின்னணி.
1958 கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை என்ற சிறிய கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை தன் ஊரிலேயே உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியிலே பயின்றார். பின்னர், அருகில் உள்ள வல்லன்குமரவிளை கிராமத்து அரசு பள்ளியில் படித்தார். இவர் தந்தை கைலாசவடிவுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அதன் வருவாயில்தான் தனது நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும். அந்த நிலையில் இவர் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, நாகர்கோவிலில் உள்ள எஸ்.டி.ஹிந்து கல்லூரியில் தனது பி.யு.சி. மற்றும் இளநிலை கணிதவியலை முடித்தார். கணிதவியலில் நான்கு பாடங்களில் நூறு சதவீத பதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற இவர், மேல் படிப்புக்காக சென்னை எம்.ஐ.டி.யில் (MIT) இளநிலை ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் சேர விருப்பப்பட்டார் அதற்காக அவர் தந்தை, அவர் குடும்பத்துக்கே வருவாய் தந்து கொண்டிருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் கால் ஏக்கரை விற்று சிவனை சென்னை அனுப்பினார். 1980ல் சிவன் எம்.ஐ.டி.ல் இளநிலை ஏரோனாட்டிகல் பட்டம் பெற்று பின் முதுநிலை ஏரோனாட்டிகல் படிப்பை 1982ல் ஐ.ஐ.எஸ்.சி. (IISC) பெங்களுருவில் முடித்து அதே ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் (ISRO) பணியில் சேர்ந்தார்.
அரசு பள்ளியில் படித்தவர்கள், தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் பலர் வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தில் இருப்பதை நாம் அறிவோம். இவர் என்ன ஸ்பெஷல்? தொழித்துறையில், ஆட்சித் துறையில் இருப்பது, வென்றதற்கான பல உதாரணங்கள் நமக்குத் தெரியும். அறிவியல், அதுவும் விண்வெளி ஆராய்ச்சியில் அப்துல் கலாம் வழியில் சிவன், இத்தகைய உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது ஸ்பெஷல்தானே? இவர் பள்ளியில் படிக்கும்போது, புத்தகப் புழுவாக இருந்தவரில்லை. தன் தந்தையோடு வயலில் உழைத்திருக்கிறார், தங்கள் தோப்பு மாங்காயை அருகே உள்ள வடசேரி சந்தைக்குக் கொண்டு சென்று விற்றிருக்கிறார், தங்கள் மாட்டுக்குப் புல் அறுத்திருக்கிறார். சென்னை MITயில் சேரும் வரை, இவரது வாழ்வில் பயணித்த அதிக பட்ச தூரம் கன்னியாகுமரிதானாம். இன்று இவர் பல நாடுகளுக்கும், இவரது சிந்தனை விண் வரைக்கும் பயணிக்கின்றன.
ISROவின் முக்கிய ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, எம்.கே.3 ஆகியவைகளில் இவரின் பங்கு மிக அதிகம். அதிலும் முக்கியமாக இவர்தான் 48 இந்திய செயற்கைக் கோள்களையும் 209 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இதுவரை விண்ணிற்கு எடுத்துச் சென்ற பி.எஸ்.எல்.வி.யின் திட்டமிடுதல், வடிவமைத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்விலும் முக்கிய பங்கு வகித்தவர். ஜி.எஸ்.எல்.வி ஏவுகணையின் இயக்குனரும் இவர் தான். அதன் பிறகு 2006ல் ஐ.ஐ.டி. மும்பையில் டாக்டர் பட்டம் பெற்றார். இவரின் உழைப்புக்காகவும் திறம் வாய்ந்த அறிவியல் சிந்தனைக்காகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இவரது பங்களிப்புக்காகவும் பல பெருமைமிகு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவை என்னென்னவென்று கூகுள் செய்து பார்த்துக்கொள்ளலாம். நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? பூமியில் இருந்து புறப்பட்ட ஒரு ராக்கெட் காற்றின் பேரழுத்தத்தைக் கடந்து விண்ணை அடைவது போல, நாகர்கோவில் அருகே உள்ள சின்ன கிராமத்தின் அரசு பள்ளியில் இருந்து, பல கஷ்டங்களைக் கடந்து இந்தியாவின் மிக முக்கிய பொறுப்பை அடைந்திருக்கும் இவரின் ஆற்றல் எது, இவரைக் கொண்டு சென்றது என்ன என்பதுதானே? "கடின உழைப்பு, கஷ்டப்பட்டு செஞ்சேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இந்த சாதனைகள் எல்லாம் மொத்த ISRO குழுவும் சேர்ந்து செய்தது. நான் என்ன செய்தேன்னா, அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு முழுசா வேலை பாக்குறேன், முழு மனசோட வேலை பாக்குறேன். நான் எப்பவுமே முழு சின்சியாரிட்டியோட வேலை பார்ப்பேன்.எங்க தோப்புல மாங்காய் பறிக்கும்போதும் சரி, எங்க மாட்டுக்குப் புல் புடுங்கும்போதும் சரி, நான் முழு மனசோட செய்வேன். நான் எந்த வேலை செய்தாலும் அதுல என் பெஸ்ட்டைக் கொடுப்பேன்" - இவை சிவனின் வார்த்தைகள்.
2017 பிப்ரவரி மாதம் பி.எஸ்.எல்.வி. 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. அதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. 2015 முதல் 2018 வரை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்தார். பின் கடந்த 10 ஜனவரி 2018 முதல் ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் தலைமை பொறுப்பை ஏற்றார். 1963ல் இருந்து 2018க்குள் முதல் முறை ஒரு தமிழன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைமை பொறுப்பு வகிக்கிறார் என்பது நாம் பெருமைப் படவேண்டிய விஷயம், பெருமைப்படும் விஷயம். சிவன் என்ன சொல்வார் தெரியுமா? "நான் தமிழன் என்பதில் எனக்குப் பெருமை, என் ஊர்க்காரர்கள், உறவினர் என்னைக் கொண்டாடுவது எனக்குப் பெருமகிழ்ச்சி. ஆனால், ISROவில் நான் ஒரு இந்தியன், தமிழகத்தைச் சேர்ந்தவன். எல்லா மாநிலத்திலுமிருந்து வந்து இங்கு பணிபுரிகிறார்கள். இங்கு என் தேசத்துக்காக நான் பணிபுரிகிறேன்" என்பார். உண்மைதான், இந்தியாவுக்கு ISRO குழுவால் பெருமை, அதில் இவர் இருப்பது நமக்குப் பெருமை. ISRO தலைவர்களில் சிவனின் தனித்தன்மை, செலவைக் குறைப்பதில் அவருக்குள்ள ஆர்வமும், திறனும். அதை சமீபத்திய திட்டங்களில் சாதித்தும் காட்டியிருக்கிறார்.
அறிவியல் சாதாரண மனிதர்களுக்கு உபயோகப்பட வேண்டுமென்பதே இவரது ஆசை. அதை அடிக்கடி சொல்வார். இன்று நமக்கு அதிவேக இன்டர்நெட்டால் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் ISRO அனுப்பும் செயற்கைகோள்களால் விளைபவை. சரி, ஒகி புயல் வந்த போதும், கஜா புயல் வந்தபோதும் ஏன் முன்னரே சரியாக கவனிக்கவில்லை? மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த அறிவியலால் என்ன பயன்? சிவனே அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார், "நாங்கள் பல விஷயங்களை கண்டுபிடித்து, சிறிய அளவில் செய்து வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். அதை பெரிய அளவில் செய்து மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது வேண்டியது அந்தந்த அரசுகளின் கையில்". உண்மைதானே? இன்னும் கையால் மலம் அள்ள விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுகள், அதற்கு நிகழ்ந்திருக்கும் கண்டுபிடிப்புகளை கண்டுகொள்ளாமல்.
விண் அறிவியலில் சாதனை நிகழ்த்தும் இவரிடம் ஒரு சுவாரசியம் என்ன தெரியுமா? இவரது கடவுள் நம்பிக்கை. "இந்த அண்டத்தைத் தாண்டிய, நமக்குத் தெரியாத, நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது. அதை நான் நம்புகிறேன்" என்கிறார் இவர். இவர் தலைமையில் மிக சுறுசுறுப்பாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சாதனையை நோக்கி, இடையில் சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு ஆதவன் திட்டம் என பல செயல்திட்டங்களோடு பயணிக்கிறது ISRO. இந்த மனிதரிடம், பெருமைமிகு தமிழரிடம் நாம் கற்றுக்கொள்வது என்ன? அவரே சொன்னதுபோல எதை செய்தாலும் முழு மனதுடன், சின்சியராகச் செய்ய வேண்டும். இப்பொழுது எந்த பள்ளத்தில் இருந்தாலும், நம் உழைப்பால் விண் உயரத்தை அடைய முடியும். அடைவோமா?