சிலருக்கு பாம்பு ஊர்வது போன்ற நினைவுகள் வந்தாலே நெளிந்துகொண்டே மனது ஓட்டம் எடுக்கும். பாம்புகள் மேல் உள்ள அச்சம் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியானது. அந்தப் பாம்புகளை உங்கள் முதுகில் ஊர்ந்து செல்லவிட்டால் என்ன செய்வீர்கள்? அப்படி அதை ஊர்ந்து செல்ல வைப்பதால் உங்களின் முதுகு வலி சரியாகும் என்றால் அனுமதி கொடுப்பீர்களா?
அண்மையில்கூட பலரை ஆச்சர்யத்துடன் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி வைரலானது அந்த எகிப்து நாட்டு வீடியோ. மேலே சொன்ன பாம்புகள் குறித்த கேள்விகளைச் செயலில் காட்டும் வீடியோதான் அது. மசாஜுக்காக படுக்கையில் கவிழ்ந்து படுத்திருக்கிறார் ஒருவர். அவரது முதுகில் குட்டிக் குட்டி பாம்புகளை ஊர்ந்து செல்லவிடுகிறார் மசாஜ் செய்பவர். இந்த வீடியோதான் உலகமெங்கும் வைரலாகி வருகிறது.
உடல் வலியைச் சரியாக்க அல்லது அமைதி கிடைக்க சிலர் ஸ்பாவை அணுகுகிறார்கள். அங்கே சென்றதும் அவர் உடம்பு பகுதியில் எண்ணெய் அல்லது ஜெல் அல்லது பவுடர் போன்றவற்றை அப்ளை செய்துவிட்டு வலி எடுக்கும் வகையில் கைகளால் மசாஜ் செய்துவிடுவார்கள். தாய்லாந்து நாடு மசாஜுக்கு மிகவும் ஃபேமஸான நாடு. அங்கு வித்தியாசமாகவும் வகைவகையாகவும் பல முறைகளில் பல பொருட்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வார்கள். ஒவ்வொரு மசாஜுக்கும் தனித்தனி விலை. ஆயிரத்தில் தொடங்கி லட்சத்திற்கும் மேலாக நீள்கிறது அந்த விலைப்பட்டியல்.
சமீபத்தில் கூட தாய்லாந்தில் யானையை வைத்து மசாஜ் என்று வீடியோ ஒன்று வைரலானது. அதேபோல, எகிப்தில் பாம்புகளை வைத்துச் செய்யும் மசாஜ் பிரபலமாகி வருகிறது.
இதுகுறித்து தெரிவிக்கும் அந்த ஸ்பாவின் ஓனர், “இந்த பாம்பு மசாஜ் எடுத்துக்கொள்பவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. சருமத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்வதால் இரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கிறது. அதனால் மன நிம்மதியும் கிடைக்கிறது” என்று கூறுகிறார்.
மேலும், இந்த மசாஜ் இரத்த ஓட்டத்தைச் சீராக அதிகரிப்பதனால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது, தசை பிடிப்பையும் சரி செய்கிறது. மூளையில் என்டார்பினைச் சுரக்கச் செய்வதால் வலி உணர்வைக் குறைத்து பாஸிட்டிவிட்டியை உருவாக்குகிறது. இந்த மசாஜுக்காக பைத்தான் வகை பாம்புகள் மற்றும் சில விஷமற்ற பாம்புகள் என 28 வகை பாம்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த மசாஜ் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு இலவசமாக மசாஜ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மசாஜுக்கு 100 எகிப்திய பவுண்ட்கள் வாங்கப்படுகிறது. 20 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த மசாஜ் செய்யப்படுகிறது.