ஹிப்னாடிசம் என்றால் ஒருவரின் மனதை இயக்குகின்ற தன்மை என்கிற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஹிப்னாடிசத்தின் மூலம் ஒருவரை நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியுமா? அவர்களை நமக்கு அடிபணிய வைக்க முடியுமா? ஹிப்னோதெரபி நிபுணர் டாக்டர் கபிலன் விடையளிக்கிறார்.
ஹிப்னாடிசம் பற்றிய தவறான புரிதலை அதிகம் ஏற்படுத்தியவை சினிமாக்கள் மற்றும் நாவல்கள். அது தெரிந்தே செய்யப்படுவதில்லை என்றாலும், சுவாரசியத்திற்காக கற்பனைகளை அதிகம் சேர்த்துத் தருகிறார்கள். மேலோட்டமான புரிதலை மட்டும் வைத்துக்கொண்டு ஹிப்னாடிசம் பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இது குறித்த நிறைய படங்கள் வந்திருக்கின்றன. தமிழில் விஜயகாந்த் நடித்த 'பார்வையின் மறுபக்கம்', சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' ஆகிய படங்கள் ஹிப்னாடிசம் பற்றியவை. திரைப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை மக்கள் உண்மை என்று நம்புகின்றனர்.
ஒருவருடைய அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் அவரை ஹிப்னடைஸ் செய்யவே முடியாது. உதாரணத்திற்கு ஒரு பையன் சரியாகப் படிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டோடு அவருடைய பெற்றோர்கள் அவரை நம்மிடம் அழைத்து வந்தால், அவருக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்பதை அறிந்த பிறகு தான் நாம் ஹிப்னாடிசம் மூலம் சிகிச்சை தருகிறோம். சிகரெட், மதுப்பழக்கத்திற்கு அடிமையான பலரும் நம்மிடம் வருவதுண்டு. தான் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பி, அது தன்னால் முடியவில்லை என்று நம்மிடம் வரும்போது நம்மால் அவர்களுக்கு உதவ முடியும்.
திரைப்படங்களில் வருவது போல் மேஜிக் மூலம் ஒருவரை மாற்றிவிட முடியாது. திரைப்படங்கள் உருவாக்கிய மாயைதான் இது. அவரவர் அவரவருடைய மனதைத்தான் ஹிப்னாடிசம் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர இன்னொருவரின் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. ஹிப்னாடிசம் மூலம் சில தீய பழக்கங்களிலிருந்து வெளிவர முடியும். பயம், கவலை, கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். ஆனால், இதற்கு சம்பந்தப்பட்டவரின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு முக்கியம்.