Skip to main content

தீராத நோய் தீர்த்தருளும் சூலூர் வைத்தியநாதசுவாமி!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Sulur Vaidyanathaswamy is the healer of incurable diseases!

 

வீணான சொற்களைப் பேசி, வாழும் நேரத்தை வீணடிக்காமல் எப்போதும் நலம்தரும் சொற்களையே பேசவேண்டும். சாதாரண வார்த்தைகளுக்கு வலிமை உள்ளது என்றால் இறைவனைப் பற்றிய மந்திர நாமாவளிக்கு எத்தகைய வலிமை இருக்குமென்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அத்தகைய வேத கோஷங்கள் முழங்க, அனுதினமும் ஈஸ்வர நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான திருத்தலம்தான் சூலூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வைத்தியநாதசுவாமி.

இறைவி: தையல்நாயகி.

புராணப் பெயர்: சூரலூர்.

ஊர்: சூலூர், கோவை மாவட்டம்.

தலவிருட்சம்: வேப்பமரம்.

தீர்த்தம்: சங்கு தீர்த்தம்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளதும், செவ்வாய் பரிகாரத் தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு (நாகை மாவட்டம்) நிகராகப் போற்றப்படுவதும், ராகு - கேது தோஷத்திற்கும் நிவர்த்தி கிட்டுகின்ற பெருமையுடன் விளங்குகின்றதுமான தலம்தான் கொங்குநாட்டுச் செவ்வாய்த்தலமான சூலூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இவ்வூர் சூரலூர், சூரனூர், சூரலூர் அரியபிராட்டி நல்லூர், சூரலூர் சுந்தர பாண்டிய நல்லூர், வைத்தியநாதபுரம் என பல பெயர்களைக் கொண்டிருந்தாலும், தற்போது சூலூர் என்றே அழைக்கப்படுகிறது.

"சூரல்' எனும் நாணல் வகையைச் சார்ந்த பிரப்பஞ்செடிகள் மிகுதியாகக் காணப்பட்டதாலும், தட்பவெப்பநிலையை மாற்றி சுழன்றடிக்கும் காற்று (சூரல் காற்று) இப்பகுதியில் முற்காலத்தில் அடிக்கடி ஏற்பட்டதாலும், இப்பகுதி சூரலூர் எனப்பட்டது.

பழங்காலத் தமிழகத்தின் மேற்குப் பகுதியாக விளங்கியதுதான் சேரநாட்டுப் பகுதியான கொங்குநாடு. அப்போது இது 24 பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதில் ஒன்று வாயரைக்கால் நாடு. இன்றைய பல்லடம், பொள்ளாச்சி வடகிழக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்நாட்டில் அமைந்த ஊர்தான் சூலூர்.

 

தல வரலாறு

இருபத்தைந்தாம் தலைமுறையாக உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட சோழர்களில், கலியுகாதி 3530-ல் (இன்று கலியுகாதி 5120) பட்டம் பெற்ற சோழன் ஒழுக்கம் தவறி நடந்தமையால், மண்மாரி பெய்து நாடு முற்றும் அழிந்தது. சோழனும் மடிய, அவனுடைய தேவிகள் சிங்களாம்பாள், சியாமளாம்பாள் ஆகிய இருவரும் கொங்குநாடு சென்று வாழ்ந்தார்கள். பிராமணர் சேரியில் சிங்களாம்பாள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். சோழநாட்டில் அரசன் இல்லாததால் யானையை ஏவ, அது சிங்களாம்பாள் இருந்த பிராமணர் சேரிக்குச் சென்று அவளுடைய பிள்ளையை வாரி எடுத்துச்சென்றது. அப்பிள்ளைக்கு கரிகாலன் என பெயரிட்டு முடிசூட்டினர். அரசனும் அரசிகள் பெயரால் சிங்காநல்லூர், சியாமளாபுரம் என இரு ஊர்களை அமைத்து அந்தணர்களுக்கு தானம் செய்தான்.

இவ்வாறு கரிகாலன் ஆட்சி செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சூழலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டான். அதனால் பித்தவெறிகொண்ட அரசன், அக்கால வழக்குப்படி குறிசொல்லும் குறத்தியைக் கேட்க, அவள் "கொங்குநாட்டில் மக்களைக் குடியேற்றி ஆலயங்களைக்கட்டித் திருப்பணி செய்தால் பித்தம் தொலையும்' என்று கூற, அதன்படி அரசன் பரிவாரங்களுடன் வந்து கொங்குநாட்டில் 36 பெரிய ஆலயங்கள், 360 சிறிய ஆலயங்கள், 32 அணைகளைக் கட்டி திருப்பணி செய்து, பைத்தியம் நீங்கப்பெற்று செங்கோல் செலுத்தினான் என்பது வரலாற்றுச் செய்தி. கரிகாற்சோழன் இங்கு காட்டினை அழித்து சமன்செய்து ஊராக்கும்போது, சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டான். அந்த மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்து, வைத்தியலிங்கமுடையார் என்ற திருநாமத்தைச் சூட்டி ஆலய கும்பாபிஷேகமும் செய்தான். நொய்யல் நதியோரம் முட்டத்திலிருந்து கரூர்வரை 36 சிவன் கோவில்களைத் திருப்பணி செய்ததாக அறியப்படுகிறது. அவற்றுள் இவ்வாலயமும் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு 1950-ஆம் ஆண்டு வெளியிட்ட "சோழன் பூர்வபட்டயம்' எனும் நூல் இச்செய்தியை உறுதி செய்கிறது.

இவ்வாறு மிகத் தொன்மை வாய்ந்த வைத்தியலிங்கமுடையார் திருக்கோவில் பிற்காலத்தில் கற்றளிக் கோவிலாக்கப்பட்டு, இறைவி தையல் நாயகியையும், பிற பரிவார மூர்த்தங்களையும் ஸ்தாபித்து, சிவாகம விதிப்படி கும்பாபிஷேகங்கள் பல கண்டு பொலிவுடன் விளங்குகிறது.

 

சிறப்பம்சங்கள்

இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட செவ்வாய், ராகு- கேது தோஷங்கள் நீங்கும்.

* மூன்றாம் வீரசோழன் (கி.பி. 1168-96) ஆட்சிக் காலத்தில் இப்பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் பூஜை தடைப்பட்டமையால் வரிக்கொடை அளித்துள்ளான் என்பதை, செலக்கரிசல் மாரியம்மன் ஆலயத்தின் முன்புள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

*ஈசானியத்தில் அருள்புரியும் கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றவர். வைத்திய நாதர் தோன்றிய காலத்தைச் சேர்ந்த மூர்த்தி யாவார். பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி வழிபாடும், கார்த்திகை மாத மகா கால பைரவாஷ்டமி யாகமும் சிறப்பாக நடக்கும்.

*சைவ - வைணவ ஒற்றுமைக்கு ஒப்பாக, திருக்கோவில் கொடிமரத்தில் தன்வந்திரி பெருமான் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. வைத்தியநாதரும் தன்வந்திரியும் உடற்பிணி மற்றும் பிறவிப்பிணியை நீக்கும் மருத்துவர்களாவர்.

*இறைவன் அருட்சக்திக்கு உதாரணமாக, 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில், சாலை விரிவாக்கப்பட வேண்டி இத்திருக்கோவிலின் சில பகுதிகளை இடிக்க அரசு உத்தேசித்தது. அப்போது வைத்தியநாதப் பெருமான்மீது பற்றுள்ள சில சிவனடியார்கள் பெருமுயற்சியெடுத்து இத்திருக்கோவில் மிகத்தொன்மையானது என நிரூபணம் செய்தனர். அரசு போட்ட கட்டளையை ரத்து செய்து, ஆண்டவன் அவர்களுக்கு இட்ட கட்டளையின்படி கோவில் அருகேயுள்ள குளக்கரையை பலப்படுத்தி, தனிச்சாலை அமைத்து ஈசன் உறையும் இடத்தைக் காப்பாற்றியது மெய்சிலிலிர்க்க வைக்கும் சம்பவமாகும்.

*திருமணத்தடை நிவர்த்திக்கு, சம்பந்தப்பட்ட ஆண் - பெண் தங்கள் கைகளாலேயே நந்திகேஸ்வரருக்கு நல்லெண்ணெய்க் காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். பின் அந்த மாலையை அணிந்துகொண்டு வைத்தியநாதசுவாமி பூஜையில் கலந்து கொண்டால் தடைவிலகி விரைவில் திருமணம் நடந்தேறும். எனவே இவர் கல்யாண குண நந்திகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என கூறுகிறார் ஆலய தலைமை அர்ச்சகரான சிவாஜல சுந்தர குருக்கள்.

*வைத்தியநாத சுவாமியின் பரம பக்தையான கணபதியம்மாள் கனவில் தோன்றிய ஈசன், "உமது தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் இரண்டு கொம்புகளுடன் கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்துவந்து என் பூஜைக்குக் கொடு' என்றார்.

*இக்கனவைக் கண்ட பக்தை விடிந்தவுடன் பணியாளை அழைத்து, குறிப்பிட்ட தென்னை மரத்திலுள்ள தேங்காயைப் பறித்துவரும்படி கூறினார். என்னே ஆச்சரியம்! ஈசன் சொல்லிய படியே அம்மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய் இருந்தது. பொதுவாக தென்னை மரத்தில் காய் முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே இருந்தது. அதைப் பறித்துக் கொண்டுவந்து பூஜைக்குக் கொடுத்த அற்புத நிகழ்வை மனம் நெகிழ்ந்து கூறினார் ஆலய அர்ச்சகரான சிவாஜல சுப்பிர மணிய குருக்கள்.

*தீராத நோயுள்ளவர்கள் கூட இத்தலத்தில் பூஜித்தபின் நலம் பெற்றோர் ஏராளம். திருப்பூரிலுள்ள வங்கி அலுவலர் ஒருவர் உடல் முழுவதும் சிறுசிறு கட்டிகள் தோன்றி விகாரமாகி அவதிப் பட்டுவந்தார். சிகிச்சை பலன் தரவில்லை. இக்கோவிலின் மகத்துவமறிந்து வந்தார்.

*அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று அம்பாள் முன் நல்லெண்ணெயை வைத்துப் பூஜித்து, அதை வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை முறையாக உட்கொண்டதன் பலனாக ஆறு மாதகாலத்தில் பூரண நலம்பெற்றதாக பூஜை ஸ்தானீகம் சின்னசாமி சிவா தெரிவித்தார்.

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில், பிரசித்திபெற்ற கோவை தண்டுமாரியம்மன் ஆலய நிர்வாக அதிகாரியின் கண்காணிப்பில் சிறப்பாக இயங்கும் இத்தலத்தில், அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாத, வருட வைபவங்கள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தலையாயப் பெரு விழாக்களாக ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், பைரவாஷ்டமி, ஆடிமாதம் முதல் ஞாயிறு நடைபெறும் ஏகாதசி ருத்ராபிஷேகம் ஆகியவை விளங்குகின்றன. சிவாலயத்திற்குரிய சந்நிதிகள் யாவும் சிறப்பாக அமைந்துள்ளன. 

குளம் அல்லது நதிக்கரையோரம் கோவில் அமைந்திருந்தால் அதற்கு சக்தியும் ஆற்றலும் அதிகம் என்பார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்றால் தெய்வீக சாந்நித்யம் அதிகமாக இருக்கும்; தெய்வீக அதிர்வுகளை உணர இயலும் என்பார்கள். இவையனைத்தும் இணைந்திருக்கும் தலமாம் - தீராத நோய்களைத் தீர்க்கவல்லதொரு தலமாம் - அங்கக் குறைபாடுகளை நீக்குவதோடு அங்காரக தோஷத்திற்கும் தீர்வு கிடைக்கிற தலமாம் - தோல் வியாதிகளை நீக்குவதோடு ராகு - கேதுக்களின் தோஷங்களைப் போக்க வல்லதொரு தலமாம் - அறுவை சிகிச்சைக்குமுன் பிரார்த்தனை செய்தால் நல்ல தீர்வினைத் தர வல்லதொரு திருத்தலமாம் சூலூரில் கோவில் கொண்டுள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை வழிபடுவோம். கலக்கங்கள் அகற்றிக் களிப்புடன் வாழ்வோம்!

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.