பாவமான மனிதர்களும் பாவம் செய்த மனிதர்களும் நாடும் முக்கியமான ஒரு இடம் கோவில். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் எனும் ஊரில் உள்ள ஸ்ரீ மங்கள ரங்கநாத பெருமாள் கோவில் குறித்து சிலிர்க்கும் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் பக்தர்கள்.
சீதை பிறந்த இடம் என்பதால் வந்த பெயர்தான் சீதக்கமங்கலம் என்கிற இந்த ஊரின் பெயர் என்பது நம்பிக்கை. கல்வி சம்பந்தமாக இங்குள்ள ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை கட்டிப் போட்டு பிரதிஷ்டை செய்தால் மாணவர்களுக்கு நன்கு படிப்பு வரும் என்கின்றனர். நிலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இங்குள்ள விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யும்போது நிச்சயம் தீர்வு ஏற்படும். ஆஞ்சநேயர், கருடாழ்வார் என்று இந்தக் கோவிலில் உள்ள கடவுள்கள் அனைவருக்கும் பூமி சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வல்லமை உண்டு என்கின்றனர்.
மதுரையில் ஒரு நீதிபதி இங்கு வந்து வேண்டிக்கொண்ட பிறகு அவருக்கு மிகப்பெரிய பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்று தீர்ந்ததாகவும் அதனால் அவர் தன் சொந்த செலவில் கோவிலுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். படியளந்த பெருமாள் நாம் வேண்டும் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் என்று உறுதியாகக் கூறுகின்றனர் மக்கள். குழந்தைகளுக்காக, பூமிக்காக, திருமணத்திற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
பல வருட வரலாற்றைக் கொண்ட இந்தக் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். சித்திரை, வைகாசியில் இங்கு நடக்கும் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைவரும் வந்து இந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்து அனுக்கிரகம் பெற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.