ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் துல்லியமான ஜோதிட பலனை கண்டறிவதைப் பற்றிய தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
உள்ளங்கை ரேகைகளை வைத்து பலன் கண்டுபிடிப்பது போல் ஜாதகத்தில் ஜனன நேரத்தை வைத்து பலன் கணக்கிடலாம். அதனால் இரண்டுமே ஒரே விஷயம்தான். ஜாதகத்தை விட கை ரேகைகள் துல்லியமானது. காரணம் ஜாதகத்தில் பிறந்த நேரங்கள் சற்று மாறுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கை ரேகைகளில் எந்தவித மாறுபாடும் இருக்காது. பல கோடி மக்கள் இருந்தாலும் ஒரே மாதிரியான கை ரேகைகள் யாருக்கும் இருப்பதில்லை. அதனால்தான் கையெழுத்திற்குப் பதிலாக கட்டைவிரல் ரேகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இது சட்டப் பூர்வமாகவும் விஞ்ஞானப் பூர்வமாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கை ரேகைகளில் நவ கிரகங்களின் பாதிப்பு இருக்கும். சந்திர மேடு, செவ்வாய் மேடு, புதன் மேடு, சூரிய மேடு, சனி மேடு, சுக்கிர மேடு இதுபோன்ற நவ கிரகங்களுக்கான இடம் கை ரேகைகளில் இருக்கும். அதுபோல் வாழ்க்கைக்கு ஆயுள், இதய, விதி போன்ற ரேகைகளின் அமைப்புகள் இருக்கிறது. இந்த அமைப்புகளை வைத்துக்கொண்டு ஒருவரின் பலனைக் கணக்கிட முடியும். சனி மேடு என்பது ஒருவரின் ஆயுலை தீர்க்கமாக அறிந்துகொள்ளப் பயன்படும்.
கை ரேகைகளில் மேற்கூறப்பட்ட மேடுகள் எவ்வாறு அமைகிறது என்பதை கண்டறிந்து ஒருவரின் பலன்களை சொல்லமுடியும். சுக்கிர மேடு என்பது ஒருவருக்கு அமையும் சகலவித பாக்கியங்களைப் பற்றி கூற முடியும். சந்திர மேடு நல்ல வகையில் அமைந்தால் ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் உள்ளுணர்வை வைத்து சொல்லிவிட முடியும். சந்திர மேடு நல்ல வகையில் அமைபவர்களுக்குத் திடமான மனது இருக்கும். சந்திர மேட்டில் மாறுபாடு ஏற்பட்டால் மனதிலும் மாறுபாடு ஏற்படும். செவ்வாய் மேட்டில், கீழ் மற்றும் மேல் செவ்வாய் மேடு என்று இரு வகை உள்ளது.
ரேகைகளிலும் மேடுகளிலும் கரும் புள்ளிகள் இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டம். ஒருவேளை கரும் புள்ளிகள் காணப்பட்டால், அந்தந்த காலகட்டத்தில், வயதில், தசாபுக்தியில் கட்டாயமாக கண்டம் வரும் அல்லது கெட்ட பெயர் வரும். ஜாதகத்தில் 12 வீடுகளாகப் பிரித்திருப்போம். அதே போல் கட்டைவிரலைத் தவிர்த்து மீதமுள்ள நான்கு விரல்களில் 12 பாகங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு பாகமும் ஒரு வீட்டைக் குறிக்கும். அது ஒவ்வொன்றும் ஒரு ராசியை அனுசரித்துப் போகும். ஒரு குறிப்பிட்ட பாகத்தில் சிறிய கோடு அல்லது கீறல் ஏற்படுவது தசாபுக்தியை குறிக்கும். அந்த தசாபுக்தியில் உள்ள ராசி மற்றும் கிரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
கட்டைவிரல் ரேகைகள் பொதுவான குணாதிசயத்தைக் குறிக்கும். கட்டைவிரல் ஜாதகத்தில் உள்ள லக்னத்தை போன்ற தனித்தன்மை உடையது. கட்டைவிரல் ரேகையில் மூன்று விதமான பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடுகளில் உள்ள இடைவெளியை அறியும்போது, கட்டாயமாக ஒருவரின் லக்னத்தை தீர்மானிக்க முடியும். இதைத் தவிர்த்து நகங்களின் அமைப்பு, சதுர அல்லது வட்ட வடிவ கை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்தால், குணாதிசயங்கள், எண்ணங்கள், வாழ்க்கை, விதி போன்றவற்றை எளிதாகக் கண்டறியலாம். ஜாதகத்தில் லக்னத்தை கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால் கை ரேகையைக் கொண்டு ஜாதகத்தை எடுப்பது மிக எளிதானது என்றார்.
Published on 21/12/2024 | Edited on 21/12/2024