- தெ.சு.கவுதமன்
ஜோஹோ என்ற பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி ப்ரமிளா ஸ்ரீனிவாசன் சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஜோஹோ பிரபலமான ஒன்றாகும். இதன் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, பல ஆண்டுகளாக கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது மனைவி ப்ரமிளா, தனது வழக்கறிஞர் ஜான் ஃபார்லி மூலமாகத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், "ஸ்ரீதர் வேம்பு உடனான 29 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் என்னையும் எங்களுடைய மகனையும் தவிக்க விட்டுவிட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார். எங்கள் மகனுக்கு ஆட்டிசம் நோயின் பாதிப்பு உள்ளது. இதோடு போராடி வரும் சூழலில், மூன்றாண்டு காலமாக என்னையோ எனது மகனையோ சந்திக்க வரவேயில்லை. எனவே கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முறையிட்டேன். இச்சூழலில், எங்கள் இருவருக்கும் பொதுவான சொத்துக்களை எனக்கே தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
இதன்மூலம் எனக்கு ஜீவனாம்சம் மிகக் குறைவாகக் கிடைக்கும் படி செய்துள்ளார். எனக்கும் எனது மகனுக்கும் துரோகம் இழைத்துள்ளார். கலிபோர்னியா சட்டப்படி, கணவன் மனைவிக்கிடைப்பட்ட சொத்துக்களை இன்னொருவருக்கு கை மாற்றுவது தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்பு மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்போதுதான் பொதுவில் வெளிவந்துள்ளன. ஆனால் அவரோ, தமிழ்நாட்டின் கிராம பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நான் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளேன் என்று முன்பு தெரிவித்திருந்தார். இதற்காகவே கலிபோர்னியாவிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மத்தளம்பாறை என்ற கிராமத்துக்கு வந்து அங்கே தங்கியபடி தனது அடுத்தகட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினார். இவர், தொழிலதிபராக மட்டுமின்றி தன்னை ஒரு இந்துத்வா சிந்தனையாளராகக் கடந்த சில காலமாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் சர்ச்சையான திருச்சி கல்யாணராமன் பேச்சு நடைபெற்ற பிராமணர் சங்க விழாவில் ஸ்ரீதர் வேம்புவும் கலந்துகொண்டிருந்தார். தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததால்தான் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் தற்போது வெளிநாட்டிலுள்ள பிராமணர்கள் தங்கள் அறிவை தாய் நாட்டுக்கு அளிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இப்படியான சூழலில் இவரது மனைவியின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மனைவியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவிக்கும் மகனுக்கும் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். அங்கே சொந்தமாக வீடு, தனது மூன்றாண்டு கால அமெரிக்க சம்பளம் அனைத்தும் மனைவிக்கே அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மகனுக்கு ஆட்டிஸம் பாதிப்பால் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், அவனுக்கு இந்தியாவில் நல்லதொரு சூழலை ஏற்படுத்த விரும்பியதாகவும், அதற்கு மனைவி ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது சித்தப்பா ராம் தான் தனது மனைவியின் மனதில் நஞ்சை விதைத்ததாகவும் இப்படி பேச வைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் நிலையில், நீதிமன்றம் தான் யாரது கூற்று சரியெனத் தீர்மானிக்கும்.