சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டின் அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த விதியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார். அதன் மூலம் ஒருவர் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை அதிபராக இருக்கலாம் என்ற புதிய விதி உருவாக்கப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகனான ஜி ஜின்பிங் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். அதன் பிறகு கட்சியில் இணைந்து பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த ஜி.ஜின்பிங் 2013 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சீனாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அத்தோடு சீனாவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இது ஒரு புறம் இருக்க ஜி ஜின்பிங் ஆட்சியில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியே பேசுபவர்கள், அவருக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் செய்திகள் வெளி வந்தன. குறிப்பாக ஜி ஜின்பிங் குறித்து எந்த விதமான விமர்சனங்களும் வெளியே வராமல் பார்த்துக்கொள்வதாகவும் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கிட்டதட்ட 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்ததாகவும், அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.