Skip to main content

அதிகரிக்கும் பதற்றம்;  "தீர்க்கமான பதிலடி கொடுப்போம்" - புதினை எச்சரித்த ஜோ பைடன்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

joe biden

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமைப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்து கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர்.

 

இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதனையொட்டி ஜனவரி மாதத்தில் ரஷ்யா தங்கள் மீது படையெடுக்கலாம் என உக்ரைன் கருதுகிறது. அதேநேரத்தில் ரஷ்யா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் மீது படையெடுத்தால், பதிலடி அளிப்போம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

 

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசியுள்ளனர். புதின் விருப்பத்தின் பேரில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுடனான பதட்டத்தை தனிகுமாறு புதினிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் எனவும் புதினை பைடன் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில் புதின், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு முற்றிலுமாக முறிந்துவிடும் என கூறியுள்ளார்.

 

ரஷ்யா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்து பதற்றத்தை அதிகரித்த நிலையில், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்