ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றப் பின் முதன்முறையாக உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், "இது அமெரிக்காவின் நாள்; இது ஜனநாயகத்தின் நாள். அமெரிக்காவில் பல அழுத்தங்களைக் கடந்து மக்களாட்சி மலர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அரசியலமைப்பை, ஜனநாயகத்தை, அமெரிக்காவை நான் பாதுகாப்பேன். நேற்றைய சவால்களைப் பற்றி நினைக்காமல், இன்றைய, நாளைய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். என்னை ஆதரிக்காதவர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். அமெரிக்க மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகள் வலுவானவை; ஆனால் அவை புதிதானவை அல்ல. வரலாறு, உண்மை, நம்பிக்கை ஆகியவை ஒற்றுமைக்கான வழிகளைக் காட்டுகின்றன. கடினமான தருணங்களை எப்படி கடக்கிறோம் என்பதை கொண்டுதான் நாம் மதிப்பிடப்படுவோம்.
உள்நாட்டு பயங்கரவாதம், வெள்ளையின வாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையுடன் இருந்தால் நாம் எந்தக் காலத்திலும் தோற்க மாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது. நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்" என்றார்.
இதனிடையே, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.