Skip to main content

ரயிலுக்கு தீ வைப்பு; 4 பேர் பலியான பரிதாபம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Setting fire to a train; 4 people were lost their lives in bangladesh

வங்காளதேசத்தில் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாக பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவை விட அதிகமான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்டிய போதும், அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அதிகரித்து வரும் செலவுகளை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.  மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அதனால், வங்கதேச தேசிய கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

அதில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கழகத்தின் தலைவர் கலிதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு அரசைக் கலைக்க கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக போலீசாருக்கும், வங்கதேச தேசிய கழகத்தினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த போராட்டத்துக்கு ஆளும் கட்சியான பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறி இருப்பதாக வங்கதேச அரசும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இதற்கு வங்கதேச தேசிய கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளும் அவாமி லீக் ஆட்சியில் இருந்தால் தேர்தல் நியாமான முறையில் நடக்காது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, அதற்கு முன்பாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, இந்த கோரிக்கையை வைத்து வங்கதேச தேசிய கழகம் கட்சி நேற்று (19-12-23) நாடு தழுவிய அளவில் ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.  

அப்போது, டாக்காவில் மோகன்கஞ்ச் எக்ஸ்பிரஸ், ஏர்போர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட நிலையில் மர்மநபர்கள் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தேஜ்காவ்ன் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, அங்கு தயாராக இருந்த தீயணைப்பு துறையினர், பல மணி போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில், அந்த ரயிலில் இருந்த பெண், அவரது மகன் உட்பட 4 பேர் தீயில் சிக்கி பலியாகினர். எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கழகம் ரயில் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போது ரயிலில் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வங்காள தேச பொதுத் தேர்தல்; ஐ.நா, அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,  “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.