உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஊடகத்தை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தெரிந்தே கரோனா வைரஸை பரப்பிருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அதோடு மட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
கோவிட் -19 எனும் கரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வைரஸ் ஆனது முதல் முறையாக வூஹான் நகரில் விலங்கு சந்தையிலிருந்து பரவியதாக கூறப்பட்டாலும், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி பாக்ஸ் நியூஸ் சேனல்கள் இந்த சார்ஸ் கோவிட்-19 சீனாவில் வூஹான் நகரில் இருக்கும் அரசு ஆய்வகத்தில் இருந்து பரவியுள்ளது என செய்திகளை வெளியிட்டன. இந்த செய்திகளின் அடிப்படையில் அதிபர் டிரம்ப் சில அதிருப்திகளை சீனாவிற்கு தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக எந்த கேள்விகளைக் கேட்டாலும் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை, எந்த தகவலையும் வழங்கவில்லை. ஒருவேளை சீனாவே இந்த வைரஸை பரப்பியது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சீனா மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா என்று கேட்டால் என்னுடைய பதில் ஆமாம் என்று தான் இருக்கும். தெரியாமல் செய்யும் தவறுக்கும், மனித சக்தியை மீறி தவறு நடப்பதற்கும், வேண்டுமென்றே ஒரு தவறை செய்வதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது.
அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகம் என இருக்கும் நிலையில் நிச்சயமாக நாங்கள் முதலிடத்தில் இருக்க முடியாது. சீனா தான் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும். ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கைகளை சீன அரசு திருத்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது உண்மையான உயிரிழப்பு சீனாவில் தான் அதிகம் இருக்கும் என்று அதிபர் தெரிவித்தார்.
இது இப்படி இருக்க, கரோனா வைரஸ் தொற்று முதலில் பரவிய நாடான சீனாவே தற்போது அந்த கரோனாவை பரிசோதிப்பதற்காக ரேபிட் கிட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கிவருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சீனா அனுப்பிவைத்துள்ள பரிசோதனை கருவிகள் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பரிசோதனை உபகரணங்களை அதற்கான வழிகாட்டுதல் முறையில் பயன்படுத்தாமல் போவதே காரணம் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அதேபோல் இனி அனுப்பப்படும் சோதனை கருவிகள் தரக்கட்டுப்பாடு ஆய்வுகள் இன்னும் முறையாக செய்து அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.