தாவுத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதாக கூறுவது தவறான மற்றும் திசை திருப்பும் வகையிலான முயற்சி எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செல்வதை தடுக்காத காரணத்தால், கடந்த 2018 ஆம் ஆண்டு, தீவிரவாதிகளுக்கு எதிரான நிதியுதவி தடுப்பு குழு பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் வைத்தது. மேலும், இதேநிலை நீடித்தால் பாகிஸ்தானைக் கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டியது வரும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தங்களது நாட்டிலிருந்து செயல்பட்டுவரும் 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்குக் கடுமையான நிதிப் பரிமாற்ற தடையை விதித்துள்ளது பாகிஸ்தான்.
ஹபிஸ் சயீத், மசூத் அசார் ஆகியோர் பெயர்களுடன் தாவுத் இப்ராஹிம் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாவுத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், “இது தவறான மற்றும் திசை திருப்பும் வகையிலான முயற்சி. ஐ.நா.சபையால் தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியல் அடிப்படையில்தான் நிதி அமைப்புக்கு பட்டியல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் தாவூத் பாகிஸ்தானில் இருப்பதாக குறிப்பிடவில்லை" எனத் தெரிவித்துள்ளது.